ஊழல் செய்வோரை தூக்கிலிட சட்டத் திருத்தம் கோரி வழக்கு: அரசிடம் முறையிட ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த பார்த்திபன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசுத் துறைகளில் பெருமளவு ஊழல் நடக்கிறது. வருவாய்த்துறை,  பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத்துறை, வணிகவரித்துறை மற்றும் கல்வித்துறைகளில் அதிகளவில் ஊழல் நடக்கிறது. லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டோருக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. ஒரு சிலரே தண்டனை பெறுகின்றனர். பலர் தப்பி விடுகின்றனர்.

இதனால் பலரும் அச்சமின்றி ஊழலில் ஈடுபடுகின்றனர். எனவே, லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, சொத்துக்கள், நகைகள் பறிமுதல், வங்கி கணக்குகள் முடக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில், ஊழல் தடுப்புச் சட்டம் 1988ல் தேவையான சட்டதிருத்தம் செய்து, சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், ‘‘சட்ட திருத்தம் கொண்டு வரும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. அந்த அதிகாரம் அரசிடம்தான் உள்ளது. மனுதாரர் தனது கோரிக்கை குறித்து அரசிடம் முறையிட்டு உரிய நிவாரணம் பெற்றுக் ெகாள்ளலாம்’’ எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories:

>