×

பத்திரப்பதிவில் மதிப்பை குறைப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு: பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ஐஜி சங்கர் கிடுக்கிப்பிடி உத்தரவு: தவறு செய்யும் அதிகாரிகள் கலக்கம்

சென்னை: நிலத்தை பதிவு செய்யும்போது குறைவாக மதிப்பு நிர்ணயம் செய்து பதிவு செய்வதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ள பதிவுத்துறை ஐஜி சங்கர், தற்போது பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதனால் தவறு செய்யும் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலங்களில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.10 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை ஒவ்வொரு ஆண்டும் பெருக்க பதிவுத்துறை ஐஜியாக உள்ளவர்கள், இலக்கு நிர்ணயம் செய்வது வழக்கம். அதன்படி, பல பகுதிகளில் இலக்குகளை விட அதிகமாக வருவாய் கிடைக்கும். சில இடங்களில் குறைவாக கிடைக்கும். மக்கள் நிலங்களை விற்கவோ, வாங்கவோ செய்தால்தான் நாங்கள் பதிவு செய்ய முடியும். எப்படி நாங்கள் வருமானம் அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் சில நேரங்களில் கூறுவதுண்டு.

ஆனால் பல பகுதிகளில் நிலத்தின் மதிப்பை குறைத்து காட்டி, பதிவு செய்வதால்தான் அரசுக்கு வருவாய் குறைகிறது. இதற்காக அதிகாரிகள் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் வருகிறது. இதனால் தான் கடந்த சில மாதங்களாக பதிவுத்துறையை குறி வைத்தே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி, லட்சக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பதிவுத்துறைக்கு புதிய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர், அரசின் வருவாயை அதிகரிப்பது குறித்து மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மண்டலங்கள் வாரியாக ஆய்வு நடத்தினார். அப்போது, நிலங்களின் மதிப்பை குறைத்து மதிப்பீடு வழங்கி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதை பதிவுத்துறை ஐஜி கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ஐஜி சங்கர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஒரு தெரு அல்லது அருகில் உள்ள சர்வே எண்ணில் உள்ள நிலங்களில் எந்த நிலம் அதிக மதிப்பு நிர்ணயம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே விலையைத்தான் தற்போது விற்பனை செய்யப்படும் நிலத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். அதோடு அந்த நிலம் குறித்து நேரடியாக ஆய்வு செய்யவும் வேண்டும். இதை மாவட்ட பதிவு அதிகாரிகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  காரணம், ஒரே தெருவில் குறைந்த மதிப்பை வைத்து பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தை உதாரணமாக வைத்து தான் மதிப்பை குறைத்து ஒரு சில சார்பதிவாளர்கள் பதிவு செய்கின்றனர்.

இதனால், தான் தற்போது பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தை பதிவு செய்தவுடன், தனக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை டிஐஜிக்கு நிலத்தின் உரிமையாளர் புகார் செய்கின்றனர். அவரும் நிலத்தை நேரடியாக ஆய்வு செய்து, பக்கத்தில் உள்ள நிலங்களின் மதிப்பை கணக்கீடு செய்து, அதில் அதிக விலையை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் மாவட்ட பதிவாளரும், டிஐஜியும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, அவர் தன் பங்கிற்கு விலையை மீண்டும் குறைத்து உத்தரவிடுவார். தற்போது, இந்த முறைகேட்டை கண்டுபிடித்த பதிவுத்துறை ஐஜி சங்கர், மாவட்ட பதிவாளர் இனிமேல் நிலத்தை பதிவு செய்தவுடன் நேரடியாக இடத்தை பார்வையிட வேண்டும். அதன்பிறகு அருகில் சர்வே எண் உள்ள நிலம் எவ்வளவு விலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை கையால் பதிவு நோட்டில் எழுத வேண்டும். அதேபோல டிஐஜியும் நிலத்தை ஆய்வு செய்து, புதிய விலையை நிர்ணயம் செய்ததற்கான காரணத்தை பதிவேட்டில் எழுத வேண்டும். மாவட்ட பதிவாளரும், டிஐஜியும் ஒரே காரணத்தை பதிவேட்டில் குறிப்பிடவில்லை என்றாலோ, வேறு வேறு காரணங்களை எழுதினாலோ மாட்டிக் கொள்வார்கள்.

அதேநேரத்தில் பதிவு நோட்டில் எழுத வேண்டும் என்பதால், தவறாக எழுதி வைத்திருந்தால் மாவட்ட பதிவாளரும் சிக்கிக் கொள்வார்கள். எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், முழுமையான விவரத்துடன் எழுதியாக வேண்டும். அறைகுறையாக எழுதியிருந்தாலும் தவறுக்காகத்தான் அப்படி எழுதினார்கள் என்றும் மாட்டிக் கொள்வார்கள். இந்த ஆய்வு நோட்டுகளை கணக்கீடு செய்யும் மாவட்ட பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவரும் சரியாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட நிலங்களை பத்திரப்பதிவுத்துறை ஐஜியும் நேரில் ஆய்வு செய்வார். அப்போது மாறுபாடுகள் இருந்தால் அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இதுவரை குறைந்த விலையை நிர்ணயம் செய்து கொள்ளையடித்து வந்த அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : arrest ,IG Shankar , Registrar, IG Shankar, Order, Officers
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...