அடையாறு புற்றுநோய் மருத்துவமனை: தலைவர் சாந்தா மறைவு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், புகழ் பெற்ற மருத்துவருமான டாக்டர் வி.சாந்தா திடீரென மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தா போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே காண்பது அரிது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அம்மருத்துவமனையில் கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றியவர்.

அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் டாக்டர் சாந்தாவின் புகழ் பாடும். மருத்துவமனையிலேயே தனது வாழ்க்கை முழுவதையும் கழித்த ஒரு மருத்துவர் இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்திருப்பதை தாங்கிக் கொள்ள இயலவில்லை.சி.வி.ராமன் மற்றும் டாக்டர் சந்திரசேகர் குடும்பத்திலிருந்து வந்த சாந்தா அனைத்து தரப்பு மக்களும் தரமான புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்கு தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.

உலகின் எந்த மூலையில் புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனே இங்கே கொண்டு வந்து ஏழை எளியவர்களுக்காக பணியாற்றியவர். டாக்டர் சாந்தாவை மருத்துவ துறை இழந்திருப்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். டாக்டர் சாந்தாவை இழந்து வாடும் அடையாறு மருத்துவமனையின் சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், மருத்துவ உலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்.

Related Stories:

>