×

நாளை பேச்சுவார்த்தை நடத்த போராடும் விவசாயிகளுக்கு உச்சநீதிமன்ற குழு அழைப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நாளை, முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த குழு அறிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இதனை ஏற்பதற்கு விவசாயிகள் தயாராக இல்லை.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 9 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் தொடர்ந்து உறுதியாக இருந்து  வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண நான்கு பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நால்வர் குழுவில் இடம்பெற்றிருந்த பூபேந்தர் சிங் மான் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்ற  முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள அனில் கன்வாத் கூறுகையில், ‘‘விவசாயிகள் மற்றும் இதர சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வியாழனன்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. குழு முன் இருக்கும் மிகப்பெரிய சவாலானது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சமாதானம்  செய்து எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பது தான். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். எங்களது சொந்த விருப்பு, வெறுப்புக்களை ஒதுக்கி வைத்து உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான அறிக்கை தயார் செய்வோம்.

குழு முன் வந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள். நாங்கள் எந்த கட்சியோ, அரசையோ சேர்ந்தவர்கள் கிடையாது. நீதிமன்றத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ளோம். வாருங்கள், வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுப்போம். அவற்றை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்வோம் என்றார்.

இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் மத்திய அரசுடன் நேற்று நடந்த இருந்த 10வது கட்ட பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி விக்யான் பவனில் பிற்பகல் பேச்சுவார்த்தை நடைபெறும்.

Tags : Supreme Court ,panel ,talks , Agricultural Laws, Negotiation, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...