×

52 வயதுக்கு மேற்பட்டோருக்கு வேலை மறுப்பு புழல் வார்டு அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

புழல்: மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட புழல் 23வது மற்றும் 25வது வார்டுகளில் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. பணி வழங்கும் ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறி கொண்டே இருப்பார்கள். இந்நிலையில், தற்போது தூய்மை பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள தனியார் நிறுவன மேலாளர் குமரேசன் தலைமையில் 23வது வார்டு அலுவலகத்தில் நேற்று காலை கூட்டம் நடந்தது. இதில், தூய்மை பணியாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் வழங்க வேண்டும். 52 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனிமேல் வேலைக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் திடீரென வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த அனைத்து கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்து தனியார் நிறுவன அதிகாரிகளிடம், அரசாங்கத்தில் 58 வயது வரை பணியாற்ற அனுமதி உள்ளது. தூய்மை பணியாளர்கள் கொரோனா காலம், மழை, புயல் போன்ற பல்வேறு பேரிடர் காலங்களிலும் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் போன்ற எவ்வித சலுகைகளும் இல்லாமல் உள்ளது. எனவே, அவர்கள் பணியை தொடர வயது வரம்பு இருக்கக்கூடாது. பணியில் இருந்து அவர்களை எந்த காரணத்துக்காகவும் நீக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஒப்பந்த தனியார் நிறுவன மேலாளர் குமரரேசன், இந்த கோரிக்கைகள் தொடர்பாக, உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒன்றரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : cleaning staff , Job denial of work to over 52s Cleaning staff besiege the ward office
× RELATED சுதந்திர தினவிழாவில் தூய்மை...