ஆரணி ஆற்றில் பாலம் உடைந்ததால் ஒரு கிமீ நடந்தே சென்ற பள்ளி மாணவர்கள்

ஊத்துக்கோட்டை: கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர், தொற்று குறைந்தவுடன் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.  இதைதொடர்ந்து, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு சுகாதார துறை மற்றும் ஆசிரியர்கள் வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி, முககவசம் ஆகியவைகள் அணிந்து வந்துள்ளார்களா என பார்வையிட்டனர். பின்னர், மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர வைத்தனர். இதற்கிடையில், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் புதிய பாலம் கட்டப்படுவதால் போக்குவரத்துக்காக மாற்று பாதை (தரைப்பாலம்) அமைக்கப்பட்டது.  

இந்த தரைப்பாலம் கடந்த நவம்பர் 26ம் தேதி ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 2 இடங்களில் உடைந்தது. இதனால், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், தற்காலிக மாற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதில் பைக், கார் ஆகியவை மட்டுமே செல்கிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம், கச்சூர், சீத்தஞ்சேரி, பெரிஞ்சேரி, அம்மம்பாக்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், நேற்று காலை ஊத்துக்கோட்டையில் உள்ள பள்ளிக்கு செல்ல பாலத்தின் ஒரு முனையில் பஸ்சில் இருந்து இறங்கி, சுமார் ஒரு கிமீ தூரம் தற்காலிக பாலத்தின் மீது நடந்தே பள்ளிக்கு சென்றனர்.

Related Stories:

>