×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை காணொலி மூலம் ஆஜராக நடிகர் ரஜினி தயார்: ஒரு நபர் ஆணையத்தில் வக்கீல் புதிய மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் ஆஜராக தயாராக உள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்தார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என பேட்டியளித்திருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதனடிப்படையில் 2020 பிப்ரவரியில் ஆஜராக ரஜினிகாந்திற்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அப்போது ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் ஆஜரானார். இதன்பின், 2021 ஜன.19ல் சம்மன் அனுப்பியது. நேற்று 24-வது கட்ட விசாரணை தூத்துக்குடியில் தொடங்கியது. இதற்காக ரஜினிகாந்த் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வக்கீல் இளம்பரிதி ஆஜரானார். அவர், நீதிபதியிடம் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து ரஜினியின் வக்கீல் இளம்பரிதி கூறுகையில், ‘கொரோனா தொற்று காரணமாக அனைத்துப் பணிகளும் காணொலி வாயிலாக நடந்து வருகிறது. எனவே காணொலி மூலம் ஆணையத்தின் முன் ஆஜராக தயாராக இருக்கிறேன் என்று ரஜினி சார்பில் மனுத்தாக்கல் செய்தேன். ஆனால், காணொலி வசதி இல்லை என்று ஆணையம் தரப்பில் தெரிவித்துள்ளனர். சென்னையில் விசாரணை நடக்கும்போது கூட காணொலி மூலம் ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்’ என்று கூறினார்.

Tags : Rajini ,Thoothukudi ,lawyer , Actor Rajini ready to appear in Thoothukudi shooting probe video: New petition filed by lawyer in one person commission
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...