அர்னாப்புக்கு ராணுவ ரகசியம் கசிந்த விவகாரம் பிரதமரே சம்மந்தப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்: ராகுல் காந்தி விளாசல்

புதுடெல்லி: ‘பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ராணுவ ரகசியங்கள் கசித்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் சம்மந்தப்பட்டு இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். டிஆர்பி முறைகேடு வழக்கில் கைதான பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடலில், பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்ட தேச பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் மற்றும் மத்திய அரசின் நெருக்கமான தொடர்புகள் குறித்த விஷயங்கள் இருப்பது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது பற்றி டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டி: பாலகோட் போன்ற ராணுவ ரகசிய தாக்குதல் தொடர்பான தகவல்கள் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி, விமானப்படை தளபதி போன்றவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும். அப்படிப்பட்ட தகவல் பத்திரிகையாளருக்கு முன்கூட்டியே கசிந்திருக்கிறது என்றால் இது ரகசிய காப்பு சட்ட விதிமீறல் இல்லையா? தேசத்தின் ரகசியம் கசிய விடப்பட்டுள்ளது. தேசியவாதிகள், தேசப்பற்றாளர்கள் என கூறிக் கொள்கிறார்கள், ஆனால், தேச விரோதமான செயல் நடந்திருக்கிறது. அர்னாப்புக்கு தகவல் கசிய விட்டது கிரிமினல் குற்றம். அது நமது விமானப்படையையும், விமானிகளையும் ஆபத்தில் சிக்க வைக்கும் காரியம். இதைப் பற்றி விசாரித்தே தீர வேண்டும். ஆனால், அர்னாப்புக்கு யார் தகவல் தந்திருக்க முடியும்? பிரதமரா? உள்துறை அமைச்சரா? இப்படி இருக்கையில் எப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்? நிச்சயம் மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பாதுகாப்பு கேள்விக்குறி

அருணாசலப் பிரதேச எல்லையில் சீன ராணுவம் புதிய கிராமத்தை உருவாக்கி இருப்பது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாட்டை யாரிடமும் தலைவணங்க விடமாட்டேன் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நினைத்து பார்க்க வேண்டும். அருணாசலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா புதிய கிராமத்தை உருவாக்கி இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு கேள்வி குறியாகி இருக்கிறது?’ என பதிவிட்டுள்ளார்.

* தொட முடியாது; சுட முடியும்

வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய ராகுல், ‘‘வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிக்கவே கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தெரியும், நான் என்ன செய்தேன் என்று. மோடியையோ வேறு யாரையும் பார்த்து எனக்கு பயமில்லை. அவர்களால் என்னை தொட முடியாது. ஆனால், சுட முடியும். நான் தேசப்பற்றாளன், இந்த தேசம் என்னை காக்கும்,’’ என்றார்.

Related Stories:

>