×

சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

* அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, போலீஸ், மத்திய-மாநில அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
* டெல்லியில் மோடியுடன் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: குட்கா ஊழலில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் 7 அதிகாரிகள் உட்பட 31 பேர் மீது 263 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 246 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் குட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குட்கா போதைப்பொருட்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மாநிலம் முழுவதும் குட்கா விற்பனை நடைபெற்று வந்தது. இதில் அதிகாரிகள் பலர் பதவியை பயன்படுத்தி குட்கா விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதிக்கு உதவியது தெரியவந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க, சிபிஐக்கு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இந்திய தண்டனை சட்டம் 120 பி, 7,8, 12 மற்றும் 13(2) மற்றும் மோசடி தடுப்பு சட்டங்களின் கீழ் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
பின்னர், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் தற்போது பதவியில் உள்ள ஐஜி அந்தஸ்தில் உள்ள 2 அதிகாரிகள் மற்றும் துணை கமிஷனர்கள், அமைச்சரின் உதவியாளர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சிபிஐ வழக்கு பதிவு செய்ததை வைத்து, அமலாக்கத்துறை சார்பில் குட்கா ஊழலில் சட்டவிரோதமாக பல கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததையடுத்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குட்கா தயாரித்து விற்பனை செய்து வந்த விக்னேஷ், மாதவராவ், சினிவாச ராவ், தலாம் உமா சங்கர் குப்தா ஆகியோர் சட்ட விரோத  பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் கடந்த 2013 முதல் 2016 மூன்று இவர்கள் குட்கா ஊழலில் ஈடுபட்டு ரூ.639.40 கோடிக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள் பெயர்களில் வாங்கி குவித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஊழலுக்கு உதவிய மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மோசடி செய்தவர்களின் சொத்துகள் 246.10 கோடி அமலாக்கதுறையால் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அண்ணாமலை நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள், போலீஸ் டிஎஸ்பி மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிவக்குமார், செந்தில்முருகன், வணிகவரித்துறை அதிகாரிகள் குறிஞ்சி செல்வன், கணேசன் ஜிஎஸ்டி அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன் உள்பட 7 அதிகாரிகள் மற்றும் தமிழகத்தில் 2012-2013 வரை வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா உட்பட மொத்தம் 31 பேர் ஊழலில் ஈடுபட்டதாக தீர்மானித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவர்களது வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 246.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். முடக்கப்பட்டுள்ள 246.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், குற்றவாளிளாக அறிவிக்கப்பட்டுள்ள 31 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று 263 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை அமலாக்கத்துறை சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விசாரித்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடைபெறும். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முக்கிய அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள், போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் விடுபட்டு இருப்பது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அந்த குற்றப்பத்திரிகையில் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை 30 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இருவருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் இன்று பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த நேரத்தில், சென்னையில் முன்னாள் அமைச்சரும் தற்போது திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.வி.ரமணா மற்றும் அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் உதவியாளர் எங்கே?
ஒரு அமைச்சரின் உதவியாளரும், அவரது நண்பருமான வரை கடந்த இரு நாட்களாக சிபிஐ விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார்போல, அந்த உதவியாளரின் செல்போன் கடந்த இரு நாட்களாக சுவிட்ச் ஆப் என வருகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால், இவைகள் எல்லாம் அதிமுகவை மிரட்ட பாஜ மேற்கொள்ளும் தந்திரம்தான். கூட்டணியில் அதிமுக இறங்கி வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர் அதிமுகவினர்.

* கடந்த 2013 முதல் 2016 வரை குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் ₹639.40 கோடிக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

* 246.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

* இந்த வழக்கில், 31 பேர் மீது 263 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை நேற்று தாக்கல் செய்தது.

Tags : Chennai Sessions Court , Chennai, Sessions Court, Gutka, Chargesheet, Filed
× RELATED குற்ற வழக்குகளில்...