5 மாநில தேர்தலுக்கு நேரடி ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் குழு அசாம், மேற்குவங்கத்தில் முகாம்: அடுத்த வாரம் தமிழகம் வர வாய்ப்பு

புதுடெல்லி: தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில பேரவை தேர்தல் தொடர்பாக வரும் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளின்படி தேர்தல் நடத்தப்பட உள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் களம்  சூடு பிடித்துள்ளதால் அங்கு அடிக்கடி ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் கமிஷனர்கள் ராஜீவ் குமார் மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர் கொண்ட குழு இன்று அசாமில் உள்ள அரசியல் கட்சிகளைச் சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் குழு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா செல்கின்றனர். நாளை (புதன்) காலை 10 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மூன்று அதிகாரிகளும்  பங்கேற்கின்றனர். அப்போது, அரசியல் கட்சிகள் மற்றுமின்றி மூத்த நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளையும் சந்திக்கின்றனர்.

குறிப்பாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். அண்மையில்,தலைமை தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் மேற்கு வங்கத்திற்கு சென்று  மாநிலத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அசாம், மேற்குவங்கம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணைய குழு இரு நாட்களுக்கு முகாமிட்டு உள்ளதால், அடுத்த வாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய  மாநிலங்களுக்கும் வந்து ஆலோசனை நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>