நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வழங்கப்படுகிறதா?..மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதயில் குப்பைகள் தரம்பிரித்து வழங்கப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் கோட்டார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடந்த காலங்களில் தேங்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொண்டு கொட்டப்பட்டு வந்தது. இதனால் வலம்புரிவிளை உரக்கிடங்கில் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. மலைபோல் தேங்கிய குப்பையால் வலம்புரிவிளை உரக்கிடங்கை சுற்றியுள்ள பல கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினர். மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்த பகுதிலேயே போட்டு உரமாக தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி மாநகர பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நுண்ணுயிர் உரமாக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்கவரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தரம் பிரித்து வழங்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்த மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மக்கா குப்பைகளில் பிளாஸ்டிக், ரப்பர்கள் உள்ளிட்ட பொருட்கள் மறு சுழற்சிக்கு கம்பெனிகளுக்கு மாநகராட்சி அனுப்பி வருகிறது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் சேரிக்கப்பட்டுள்ள குப்பைகள் தற்போது பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து வழங்குகிறார்களா என அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று மாநகராட்சி மாநகர்நல அதிகாரி டாக்டர் கின்சால் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை மற்றும் அதிகாரிகள் கோட்டார் குறுந்தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து மாநகர்நல அதிகாரி டாக்டர் கின்சால் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது 11 நுண்ணுயிர் உரமாக்கும் கூடங்கள் மூலம் உரமாக்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாநகர பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் கிடைக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து வழங்க அறிவுரை வழங்கியுள்ளோம். இதுதொடர்பாக மாநகரத்தில் உள்ள பல பகுதிகளில் ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை சேகரிக்கும் செல்லும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை பிரித்து வாங்கவும் கூறியுள்ளோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மக்களிடம் எடுத்து சொல்லவும் அறிவுரை வழங்கியுள்ளோம். மக்கும் குப்பைகளை உரமாக்கப்பட்டு வருகிறது. இதுபோல் மக்கா குப்பைகளை புளியடி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தாழ்வானஇடத்தில் போடப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்கள் ஒரு கம்பெனிக்கு கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி மாநகர பகுதியில் சேகரிக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை கொடுத்து வருகிறோம். மக்களும், வியாபாரிகளும் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும். என்றார்.

Related Stories:

>