×

உத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்

மீரட், உத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை செய்த புகாரில் போலீசார் சோதனை செய்த போது, கிராம மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் உட்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் ருஹாசா கிராமத்தில் வசிக்கும் சிலர் சட்டவிரோதமாக மாடுகளை வதை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாடுகளை வதைப்படுத்திய நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே கிராமத்தை சேர்ந்த கும்பல் ஒன்று, போலீசாரை நோக்கி கற்களை வீசினர். மேலும் 2 போலீஸ் வாகனங்களையும் கற்களை வீசி தாக்கினர். இந்த சம்பவத்தில் புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். கும்பலை கலைப்பதற்காக வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இச்சம்பவத்தால், அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீஸ் குழு ஒன்று திடீெரன சோதனை நடத்தியது. சட்டவிரோத மாட்டு வதை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரை போலீஸ் வாகனத்தில் அமருமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், ​அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் போலீசாரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களைத் தாக்கி உள்ளனர்.  பின்னர், கற்களை வீசி தாக்கினர். காவல்துறையினர் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக ருஹாசா கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Uttar Pradesh ,policemen ,attack , துப்பாக்கி சூடு
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...