×

பாஜவுக்கு போய் வந்தவருக்கும் சீட் இல்லை.. பாஜவுக்கு போனவருக்கும் தொகுதி இல்லை : அமைச்சர் கறார்

வேலூர், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் தனக்கு ‘சீட்’ இல்லை என்றதும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ விகேஆர்.சீனிவாசன் பாஜகவுக்கு தாவினார். அவருக்கு அங்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் என பதவிகள் வழங்கப்பட்டன.
வேலூர் அதிமுக மேயராக பதவி வகித்தவர் கார்த்தியாயினி. மேயர் பதவிக்காலம் முடிந்தபிறகு அதிகளவு கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் அவர் ஒதுங்கியிருந்தார். இதையடுத்து அவரை, விகேஆர்.சீனிவாசன் பாஜகவுக்கு அழைத்து சென்றார். தற்போது மாநில மகளிரணி பதவி கார்த்தியாயினிக்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜவில் சீனிவாசனையே ‘ஓவர்டேக்’ செய்துள்ளார் கார்த்தியாயினி. இதனால் கடுப்பான சீனிவாசன் மீண்டும் தாய் கழகத்துக்கே (அதிமுக) திரும்ப முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட அமைச்சரிடம்(வீரமணி) கூட அவர் தகவல் தெரிவிக்கவில்லையாம். வேறு இரண்டு ‘மணி’யான (தங்கமணி, வேலுமணி) அமைச்சர்களின் ஆதரவோடு அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஆற்காடு தொகுதியில் தனக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று சீனிவாசன் நம்பிக்கையுடன் இருக்கிறாராம். ஆனால், பாஜவுக்கு போய்விட்டு வந்தவருக்கு சீட் தரக்கூடாது என்று அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்களாம். தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், அதிமுகவுக்கு திரும்பிய சீனிவாசன் மீது மாவட்ட அமைச்சரும் கடுப்பில்தான் இருக்கிறாராம்.
அதேநேரத்தில் பாஜவில் மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பை வகிக்கும் கார்த்தியாயினி, கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுள்ளாராம். அதற்கு மாநில தலைமையும் பச்சைக் கொடி காட்டி விட்டதாம். மாநிலத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக, இவருக்கு பாஜ சீட் தருவதை விரும்பவில்லையாம். மேயர் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு கட்சி தாவிய அவர் மீது அதிமுக நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

குறிப்பாக உள்ளூர் அமைச்சர், ‘‘அவருக்கு சீட் கொடுத்தால் ஒரு தொகுதி நமக்கு இழப்புதான் என்று அதிமுக தலைமையிடம் எச்சரித்துள்ளாராம். மேலும், அங்கு சிட்டிங் எம்எல்ஏ லோகநாதனும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக உள்ள ஜெயப்பிரகாஷ், குடியாத்தம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அணி கோவிந்தராஜன், காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ் ஆகியோர் சீட்டு கேட்டு காய் நகர்த்தி வருகிறார்களாம்.



Tags : BJP ,Minister Karar , பாஜ
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு