×

நாடாளுமன்ற தேர்தலைப் போல் சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

பள்ளிபாளையம்:தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தூள்செட்டி ஏரி பகுதியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மக்களிடம் குறை களை கேட்டறிந்து பேசினார். பின்னர் நேற்று மாலை, சேலம் மாவட்டம் இடைப்பாடி குரும்பப்பட்டியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து இரவு சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

இங்கிருந்து சங்ககிரி வழியாக இன்று காலை 8.30 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருக்கு வெப்படை நான்கு சாலையில் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பாதரை கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு மாநாடு போல் பெண்கள் திரண்டு வந்துள்ளீர்கள். நீங்கள் என்ன நினைத்து, உறுதியோடு திரண்டுள்ளீர்களோ, அது நடக்கும். அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, திமுக ஆட்சி நிச்சயம் அமையும். கடந்த எம்பி தேர்தலோடு தமிழகம் முழுவதும் 12,600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி கூட்டத்தை நடத்தினோம். நானும் 600க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்று பேசினேன். அது எம்பி தேர்தலில் திமுக அணியை மிகப்பெரிய அளவில் வெற்றியடையச் செய்தது. நாடாளுமன்றத்தில் 3வது பெரிய இடத்தில் திமுக அணி இருக்கிறது.

அதேபோல், உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தந்தார்கள். எப்போதும், உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும். ஆனால், மாநிலம் முழுவதும் திமுகவிற்கு வெற்றியை தந்தீர்கள். அந்த தேர்தல் வாக்குப்பதிவின்போது, அதிமுகவினர் அராஜகத்தை, அக்கிரமத்தை, ஏன் கலவரத்தை கூட ஏற்படுத்தினார்கள். வாக்கு எண்ணும் இடத்தில் பிரச்னையை ஏற்படுத்தினார்கள். வெற்றி பெற்றவர்களை தோல்வியடைந்தவர்களாகவும், தோல்வியடைந்தவர்களை வெற்றி பெற்றவர்களாகவும் அறிவித்தார்கள். அதையெல்லாம் மீறி 70 சதவீத வெற்றியை திமுக பெற்றது.

ஊராட்சி சபை கூட்டம் எப்படி எம்பி தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் திமுக அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்ததோ, அதேபோல் தற்போது நடத்தப்படும் மக்கள் கிராம சபை கூட்டம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும். ஓர் முடிவோடு பெண்கள் அமைதியாக இருக்கும் இக்கூட்டத்தை பார்க்கும்போது, நிச்சயமாக நாம் வெற்றியை பெற போகிறோம். அதில், எந்த மாற்றமும் இல்லை.

குமாரபாளையம் தொகுதியில், விசைத்தறி நெசவாளர்களுக்கான பிரச்னை, பட்டா, குடிநீர், சாலை, மருத்துவமனை, பள்ளிக்கூடம், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்டம் தொடர்பான பிரச்னைகள் உள்ளது. தமிழகம் முழுவதும் கிராமங்களில் இத்தகைய பிரச்னைகள் இருக்கிறது. குமாரபாளையம் தொகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் மேம்பாட்டிற்கு தொகுதி எம்எல்ஏவாகவும், மூத்த அமைச்சராகவும் இருக்கும் தங்கமணி, எதுவும் செய்யவில்லை.

10 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ளனர். அவர்களின் குறைகளை தீர்க்க தங்கமணி நடவடிக்கை எடுக்கவில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வேலையை இழந்துள்ளனர். தொழிலாளர்கள், கந்து வட்டி, அதுவும் மைக்ரோ பைனான்ஸ் கொடுமையில் தவித்து வருகிறார்கள். நெசவுக்கு தேவையான தறிகள் குறைந்துள்ள சூழல் உருவாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலையை போல், நெசவாளர்கள் தற்கொலையும் அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் கடந்த 2 ஆண்டில் 4 நெசவாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதுவும் மைக்ரோ பைனான்ஸ் பிரச்னையால் தற்கொலை செய்கிறார்கள். நூல் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ₹150க்கு விற்றநிலையில் தற்போது ₹210 ஆக அதிகரித்துள்ளது. 60 ரூபாய் கூடுதலாகும். தொழில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் 400க்கும் அதிகமான சாயப் பட்டறைகள் உள்ளன. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் காவிரி மாசுபடுகிறது. இந்த மாசை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தேர்தலின் போது, தங்கமணி வாக்குறுதியாக கூறினார். அதுவும் ஓராண்டில் அமைக்காவிட்டால், பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். ஆனால், பொது சுத்திகரிப்பு ஆலை இன்னும் அமைக்கப்படவில்லை. அவர் ராஜினாமாவும் செய்யவில்லை. இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : victory ,MK Stalin ,elections ,Assembly ,DMK , MK Stalin
× RELATED சுடர் வடிவேல் சுந்தரி