×

குமரியில் பருவம் தவறி பெய்த மழையால் தேன் அடைகளில் வேகமாக பரவும் மர்மநோய்-விவசாயிகள் கவலை

*குரல் அற்றவர்களின் குரல்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பருவம் தவறி இம்மாதம் தொடக்கத்தில் பெய்த மழை காரணமாக தேனீக்களில் மர்மநோய் பரவி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும், மலைப்பகுதிகளிலும் தேன் உற்பத்திசெய்யும் தொழில் நடைபெற்று வருகின்றது. மார்த்தாண்டம் என்றால் தேன் களஞ்சியம் என்பதற்கேற்ப மார்த்தாண்டத்தை மையமாக வைத்து தேன் உற்பத்தி நடைபெறுகிறது. குமரி மாவட்ட பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்கள் தேன் உற்பத்தியின் சிறந்த மையமாக விளங்குகிறது.

1934ம் ஆண்டு கனடா நாட்டைச் சார்ந்த டாக்டர் ஸ்பென்சர் காட்ச் மார்த்தாண்டம் பகுதி கிராமங்களில் சுய உதவி திட்டமாக தேன் உற்பத்தியை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் படிப்படியாக தேன் உற்பத்தி அருகில் உள்ள பிற கிராமங்களிலும், தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் பரவியது. இன்றைய நிலையில் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக தேன் உற்பத்தி செய்வதோடு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழில் வாயிலாக தேன் பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட மறைமுக வேலைவாய்ப்பையும் பெறுகின்றார்கள்.

ஆண்டுக்கு 15 லட்சம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் தேன் சார்ந்த பொருட்கள் தயாரிப்பிலும் தேன் உற்பத்தியின் பங்கு சிறப்பிடம் பெற்றுள்ளது.தேன் உற்பத்தி விவசாயத்துடன் பின்னிப்பிணைந்துள்ள தொழிலாகும். தேனீக்கள் விவசாயிகளின் நண்பர்களாக செயல்பட்டு தன் உணவுக்கு பூக்களின் மகரந்தப்பொடிகளையும், பூக்களில் சுரக்கின்ற தேனையும் சேகரிக்கின்ற போது மகரந்த சேர்க்கை ஏற்பட்டு விவசாய உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் வனங்களில் தாவரங்கள் மீண்டும் உருவாகுவதற்கும் தேனீக்கள் மூல காரணமாக விளங்குகின்றன. தேனீக்கள் இல்லை என்றால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுவதுடன் வனங்கள் அழியவும் காரணமாகி விடும்.

குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் தேன் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உரிய காலத்தில் தேன் பெட்டிகளை வைத்துள்ள இடங்களில் சென்று தேனீக்களை பராமரிக்க முடியாததும் ஒரு காரணமாக கருதப்பட்டது. தற்போது தேன் பெட்டிகளில் தேனீக்களை மர்ம நோய் அதிவேகமாக தாக்கி தேனீக்கள் பெருமளவில் அழிந்து வருகின்றன. இது ஒருவித வைரஸ் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வளர்ப்பு தேனீக்களின் அடைகளில் ஒரு வித கறுப்பு நிறம் பரவி வருகின்றன. இதன் விளைவாக முட்டைகள், லார்வாக்கள், இளம் குஞ்சுகள் இறந்து விடுகின்றன. இவ்வாறு தேனீக்கள் பாதிக்கப்படுவதால் உயிருடன் இருக்கின்ற தேனீக்கள் தேன் பெட்டிகளை விட்டு வெளியேறி விடுகின்றன. 100 பெட்டிகள் ஒரு இடத்தில் இருந்தால் அதில் 40 பெட்டிகளில் தேனீக்கள் அனைத்தும் இடம் பெயர்ந்துள்ளன என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கான தேனீக்கள் இவ்வாறு பெட்டிகளில் இருந்து வெளியேறி விடுவது இதனால் தேனீ உற்பத்தியாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பும், வளர்த்து வந்த தேனீக்களை இழக்கின்ற நிலையும் ஏற்படுகின்றன. ஒரு பெட்டி தேனீக்களுடன் தயார் செய்ய ரூ.1600 முதல் ரூ.1700 வரை ஆகிறது. இது தேன் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதற்கு பருவம் தவறி நடப்பு ஜனவரி மாதம் பெய்த மழையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மழையின் தாக்கம் நோய் பரவலை அதிகப்படுத்தியுள்ளது.

கேள்விக்குறியாகும் தேன் உற்பத்தி(பாக்ஸ்) இது தொடர்பாக சூழியல் ஆர்வலர் டேவிட்சன் சற்குணம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தியாளர்கள் ரப்பர் தோட்டங்களில் தேன் பெட்டிகளை வைக்கின்றார்கள். தேன் சேகரிக்கின்ற காலத்தில் ரப்பர் மரங்களுக்கு பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால் மிகவும் மிருதுவான உடல் உடைய தேனீக்கள் இறக்க நேரிடுகின்றன. உயிருடன் இருக்கின்ற தேனீக்களின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஊடுருவி தேனீக்களின் வீரியம் குறைய வாய்ப்புகள் உள்ளன.

பூக்களில் இருக்கின்ற தேனில் பூச்சிக்கொல்லி மருந்துகள் படிந்துள்ளதால் இறுதிக் கட்டத்தில் நாம் சேகரிக்கின்ற தேனிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இவை உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.தேன் உற்பத்தி பிப்ரவரி மாதம் துவங்கி ஏப்ரல் மாத இறுதியில் முடிவடையும். தேன் உற்பத்திக்கு உற்பத்தியாளர்கள் தற்போது தயாராகி வருகின்ற நிலையில் மர்மநோய் உற்பத்தியாளர்களை கடும் அதிர்ச்சிக்கு தள்ளிவிட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் எதிர்பாராத தொடர் மழையால் தேன் பெட்டிகளில் படர்ந்துள்ள நோயின் தன்மை அதிகரித்துள்ளதால் மேலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நோயின் மூலகாரணத்தை ஆராய்ந்து நோயை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இல்லையேல் தேன் உற்பத்தி தொழில் குமரி மாவட்டத்தில் கேள்விக்குறி ஆகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Mystery-farmers ,spread ,Kumari , Nagercoil: Due to heavy rains earlier this month, bee disease is spreading in Kumari district.
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து