பொள்ளாச்சி அருகே குடோனில் பதுக்கிய 40 டன் மலிவு விலை உர மூட்டைகள் பறிமுதல்-கேரளா, ஆந்திராவுக்கு கடத்தியது அம்பலம்; இருவர் தப்பியோட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி உடுமலை ரோடு கெடிமேடு அருகே டி.மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான குடோனில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு மலிவு விலை யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சப்-கலெக்டர் வைத்தியநாதன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த குடோனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மதியம் தாசில்தார் தணிகைவேல் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி, வேளாண் அலுவலர் துளசிமணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று குடோனில் ஆய்வு செய்தனர்.

அப்போது, பயனாளிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் அடுக்கடுக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  

அங்கிருந்த சிலர் அதிகாரிகளை கண்டதும் தப்பியோடினர். விசாரணையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரூ.265 மதிப்புள்ள உர மூட்டைகளை மொத்தமாக இருப்பு வைத்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரி, டெம்போவில் கடத்தி ரூ.1650 வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும், உரங்களை எடை போட்டு வாகனங்களில் எடுத்து செல்ல போலி பிளாஸ்டிக் பைகளும் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த குடோனில் இருந்த தலா 45 கிலோ எடை கொண்ட 905 மூட்டைகளில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 40 டன் உரத்தையும்.

உரத்தை பேக் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் காலி பைகளையும் பறிமுதல் செய்தனர்.

உர மூட்டைகள் கடத்தி கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உர மூட்டைகள் பதுக்கிய குடோனுக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். பறிமுதல் செய்த உர மூட்டைகள் அனைத்தும் வேளாண் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடோனை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த பொள்ளாச்சியை சேர்ந்த மும்மூர்த்தி, மேலாளர் சந்தோஷ்குமார் ஆகியோரை கோமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.  விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மலிவு விலை உர மூட்டைகளை, கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>