×

24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது-பொன்விழா கண்ட செய்யாறு அணைக்கட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?

*கலக்கல் கார்னர்

பெரணமல்லூர் : திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூர் பின்தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. பெரணமல்லூர் ஒன்றியத்தில் கெங்காபுரம், கொழப்பலூர் பகுதி வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது. செங்கம் குப்பனத்தம் பகுதியில் தோன்றும் செய்யாறு 130 கிலோமீட்டர் தூரம் சென்று பாலாற்றில் கலக்கிறது.

ஆவணியாபுரம் பகுதி அருகே ஆரணி- வந்தவாசி நெடுஞ்சாலையில் பெரணமல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது செய்யாறு அணைக்கட்டு. தமிழக பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் பொன்விழா கண்ட செய்யாறு அணைக்கட்டு 1852 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டு செய்யாற்றுப்படுகையில் சுமார் 80வது கிலோ மீட்டரில் சிறந்த கட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளது. தற்போதும் மிகவும் உறுதியான நிலையில் இருந்து வருகிறது. செய்யாற்றுப்படுகையில் மழையின்போது வரும் வெள்ளம் இந்த அணைக்கட்டு வழியே வீணாகாமல் சேமித்து வைத்து ஏரிகளுக்கு செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அணைக்கட்டு வலதுபுறம் பிரதான பக்க கால்வாய் 7 ஷட்டர்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் செல்லும் தண்ணீர் 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கால்வாய் வழியே பிரித்து அனுப்பப்படும் தண்ணீர் செய்யாறு வட்டத்தில் 95 ஏரிகள், வந்தவாசி வட்டத்தில் 52 ஏரிகள் மற்றும் உத்திரமேரூர் பகுதியில் 4 ஏரிகள் என்று 151 ஏரிகள் நிரம்பும் வகையில் இந்த அணைக்கட்டு கால்வாய் அமைந்துள்ளது.

மேலும் கால்வாய் செல்லும் வழியில் வாழ்குடை, செங்காடு, கோவிலூர், நல்லாளம் மற்றும் ஆயிலவாடி என்று 5 இடங்களில் திருகுமுறை ஷட்டர்கள் பொருத்தப்பட்டு பாசனத்திற்கு நீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக இதன் எல்லையில் இருந்து சுகநதி உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் தண்ணீர் மதுராந்தகம் ஏரியில் கலக்கும்படி கால்வாய் அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த செய்யாறு அணைகட்டையொட்டி பொதுப்பணித் துறையினரின் ஆய்வாளர் மாளிகை வளாகம் அமைந்துள்ளது. இங்கு உலக வங்கி நிதிஉதவி திட்டத்தின் கீழ் சாதாரண மழைமானி, தானியங்கி மழைமானி என்று 2 மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 3ஆவதாக தொலைநோக்கு மழைமானி அமைக்க இந்த வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் தொலைநோக்கு மழைமானி ஆனது ஜிபிஆர்எஸ் சிஸ்டம் மூலம் அமைக்கப்பட உள்ளதால், இந்த பகுதியில் பெய்யும் மழை அளவினை சென்னையிலிருந்து தெரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பகுதியாக செய்யாறு அணைக்கட்டு பகுதி திகழ்ந்து வருவதால் இப்பகுதியை பொதுமக்கள் சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட உரிய அதிகாரிகள் பொன் விழா கண்ட அணைக்கட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு.

அணைக்கட்டுக்கு மணல் கொள்ளையர்களால் ஆபத்து

பொன்விழா கண்ட நிலையில் 150 ஆண்டுகளை கடந்த செய்யாறு அணைக்கட்டு பகுதி அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைக்கட்டு அருகே சுற்றியுள்ள பகுதிகளில் மணல் கொள்ளையர்கள் இரவு பகலாக மணலை திருடி செல்வதால் அணைக்கட்டு வலுவிழக்க வாய்ப்புள்ளது. எனவே மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : lands ,dam ,tourist destination , Peranamallur: Peranamallur is a backward area in the Thiruvannamalai district. Gengapuram in Peranamallur Union,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...