×

புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட மருத்துவர் சாந்தா என்றும் நினைவுகூரப்படுவார்; அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது!: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மருத்துவர் சாந்தாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட மருத்துவர் சாந்தா என்றும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவு செய்திருக்கிறார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சாந்தா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலக புகழ்பெற்றவர் மருத்துவர் சாந்தா, தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை புற்றுநோய் மருத்துவமனையில் செலவிட்ட மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவை ஒட்டி பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர் சாந்தாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புற்றுநோய்க்காக மேற்கொண்ட உயர்தர சிகிச்சைக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றுகிறது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. அங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய மருத்துவர் சாந்தா இறந்தது மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. சாந்தாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று மோடி தெரிவித்துள்ளார். 2018ல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் சாந்தாவை சந்தித்ததை பிரதமர் மோடி நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Santa ,Modi ,demise , Cancer treatment, doctor Santa, demise, pain, Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...