×

இந்தியாவிற்குள் ஊடுருவி புதிய கிராமத்தை கட்டமைத்தது சீனா : மத்திய அரசு சீனாவிடம் தோல்வியை ஒப்புக் கொண்டதா என ப.சிதம்பரம் கேள்வி

சென்னை :அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய எல்லையில் இருந்து 4.5 கி.மீ. தூரத்தில் 101 வீடுகளுடன் புதிய கிராமத்தை சீனா கட்டியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சாரி சூ ஆற்றங்கரை அருகே 101 வீடுகளுடன் சீனா புதிய கிராமத்தை உருவாக்கி உள்ளது. இதனை பிளானட் லேப் நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. கடந்த 2019 ஆகஸ்டில் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களில், இப்பகுதியில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு நவம்பரில் எடுத்த புகைப்படங்களில் இந்திய எல்லையில் இருந்து 4.5 கி.மீ தூரம் ஊடுருவி சீனா 101 வீடுகள் கட்டப்பட்டிருப்பதும், அதனையொட்டிய பகுதியில் சாலைகள் அமைத்து வருவதும் தெளிவாக தெரிகிறது.சீனாவின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், “இந்திய எல்லைக்குள் சீனா சமீபத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருவதை இந்தியா கவனித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக சீனா உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,”என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், இது குறித்து மத்திய அரசு என்ன சொல்ல போகிறது என்று கேட்டுள்ளார். ஆக்கிரமிப்பு உண்மையாக இருந்தால் சர்ச்சைக்குரிய இடத்தை சீனா நிரந்தரமாக தங்களுடையது ஆக்கி கொண்டதா என்று கூறியுள்ளார். இந்திய எல்லையில் சீனா 100 வீடுகள், கடைவீதி, இருவழிச்சாலை அமைந்துள்ளதாக கடந்த ஆண்டு அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.மக்களவை பேசியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் மத்திய அரசு சீனாவிடம் தோல்வியை ஒப்புக் கொண்டதா அல்லது இதற்கும் எதிர்கட்சிகளை குறை சொல்ல போகிறதா என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : village ,China ,P. Chidambaram ,India ,government , P. Chidambaram
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...