மஹாராஷ்டிராவிற்கு ஓர் அங்குல நிலத்தை கூட விட்டுத் தர மாட்டோம்!: கர்நாடக முதல்வர் எடியூரப்பா கண்டனம்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓர் அங்குல நிலத்தை கூட மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு விட்டுத்தரமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெலாகவி, கார்வார், பீதர், நிப்பானி உள்ளிட்ட சில பகுதிகளில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால் இப்பகுதி தங்களுடையது எனவும், இப்பகுதிகளை மஹாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் எனவும் மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மட்டுமின்றி அம்மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மராத்தி மொழி மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைப்பது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கேரே ஆற்றிய உரை அருவருப்பானது. தங்கள் மாநிலத்தில் இருந்து ஓர் அங்குல நிலத்தை கூட உத்தவ் தாக்கரேவால் எடுக்க முடியாது. எடுக்கவும் விடமாட்டோம்.

இந்த விவகாரத்தில் மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது. எங்கள் மாநிலத்தில் உள்ள பகுதிகளை மஹாராஷ்டிரா ஆக்கிரமிக்க நினைத்தால் ரத்த ஆறு ஓடும் என கர்நாடக அமைப்புகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>