குடிமராமத்து பணிக்கு 20% கமிஷனை கண்டித்து திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பள்ளிப்பட்டில் பரபரப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில், குடிமராமத்து திட்ட பணிகளுக்கு 20 சதவீதம் கமிஷன் கட்டாய வசூல் செய்வதை கண்டித்து, திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி வரவேற்றார்.  அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக கவுன்சிலர்கள் பொன் சு.பாரதி தலைமையில் முத்து, நதியா நாகராஜ், சுகுணா நாகவேல், தேமுதிக கவுன்சிலர் உஷா  ஸ்டாலின் ஆகியோர் மன்ற கூட்டத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஒன்றியத்தில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளுக்கு இதுவரை பணிக்கான தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர் வாரும் பணிகளுக்கு 20 சதவீதம் கட்டாயமாக வசூல் செய்யப்படுகிறது.

 பணிக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையில் பாதி தொகை அமைச்சர் முதல் உள்ளூர் அதிமுகவினர் வரை வழங்க வேண்டியிருப்பதால், தரமான முறையில் பணி செய்ய முடியவில்லை. இதனால், வளர்ச்சி பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் முறையாக ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இதனைதொடர்ந்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பொறியாளர் வளர்ச்சி பணிகளுக்கு  விரைவில் நிதி வந்தவுடன் ஒப்பந்ததாரர்களுக்கு பணிக்கான தொகை வழங்கப்படும் என்றும், அனைத்து பணிகளும் முறையாக நடைபெறும் என்று உறுதி கூறினர். இதனை அடுத்து நடைபெற்ற மன்ற கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு  27 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக ஒன்றிய குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

சாதாரணமாக ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்பது வழக்கம். கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் தருவதும், செய்தியாளர்கள் குறிப்பெடுத்து செய்தியாக வெளியிடுவது வழக்கமாக நடைபெறும். இருப்பினும், அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி விஸ்வநாதன் தலைவராக பொறுப்பேற்றபின் நடைபெற்ற நான்கு கூட்டங்களிலும் மன்ற கூட்டத்தில் பங்கேற்க செய்தியாளர்கள் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் கூறாமல் மழுப்புகின்றனர்.

Related Stories:

>