அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும்: அரசு அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: அனுமதியில்லாத கட்டுமானங்கள், சிலைகளை அகற்ற வேண்டும். இதுதொடர்பாக அரசுத்தரப்பில் ஒருங்கிணைந்த அறிக்கையளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் பல இடங்களில் தலைவர்களின் சிலைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களிலுள்ள சிலைகளால் சமூக ஒற்றுமை பாதிக்கிறது. பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று கூடும் கூட்டத்தால் பிரச்னை எழுகிறது. சில இடங்களில் பிரச்னையை தவிர்க்க சிலைகளுக்கு போலீசார் 24 மணிநேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியில்லாத சிலைகளை அகற்றவும், அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ள சிலைகளிலுள்ள ஏணிப்படியை அகற்றவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், ‘‘பொது இடங்கள், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை அரசு அகற்ற வேண்டும்.

அரசியல் மற்றும் மதம் சார்ந்தவையாக இருந்தாலும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அரசுத்தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>