×

மல்லையாவை நாடு கடத்த தாமதம் ஏன்? அரசு விளக்கம்

புதுடெல்லி: ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, 2016ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் தப்பி சென்றார். அவரை நாடு கடத்தும் உத்தரவு 2017 ஏப்ரலில் ஸ்காட்லாந்து போலீசாரால் பிறப்பிக்கப்பட்டது. தற்போது மல்லையா ஜாமீனில் வெளியே இருக்கிறார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு அனுமதி அளித்தது. இந்நிலையில், அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், அசோக் பூஷண் அமர்வில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று ஆஜராகி, ‘‘விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இங்கிலாந்து சட்டத்தின்படி, விஜய் மல்லையா மீதான விசாரணை முடியும் வரை நாடு கடத்த முடியாது.

இந்த விவகாரத்தில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதால், ரகசியத்தன்மை காக்கப்பட வேண்டும். எனவே, அரசு இதற்கு மேல் விளக்கம் அளிக்க முடியாது. அதே நேரம் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அரசு நன்கு உணர்ந்திருக்கிறது’’ என்றார். கடந்த அக்டோபரில், விஜய் மல்லையா மீது ரகசிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், அது முடியும் வரை அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Mallya , Why the delay in deporting Mallya? Government Interpretation
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்