உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்போட்டுகொண்ட அடுத்த நாளே சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும், 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேரும் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பி உள்ளனர். இந்தநிலையில், தடுப்பூசி போட்ட அடுத்த நாளே உபியில் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தில் உள்ள தீனதயாள் உபத்யா மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்த மகிபால்(46) கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உயிரிழந்தார். தடுப்பூசி போட்டதால் மகிபால் உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மகிபாலின் மகன் விஷால் கூறுகையில், ‘‘எனது தந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் காய்ச்சல் ஏற்பட்டதோடு, மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்” என்றார்.  மகிபால் மரணத்தால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனை அறிக்கையில், அவர் இதயநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழப்புக்கும், கொரோனா தடுப்பு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மிலிந்த் சந்ரா கார்க் கூறுகையில், ‘‘மகிபாலின் இதயம் விரிவடைந்து இருந்தது. ரத்தம் உறைந்து இருந்தது. இது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதை காட்டுக்கின்றது” என்றார். ஆனாலும், அரசு மருத்துவமனை சுகாதார ஊழியர் மகிபால் உயிரிழப்பு தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஒருவர் பலி

உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து, கர்நாடகாவிலும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 43 வயது நபர் உயிரிழந்தார். இவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவரது பிரேத பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதனால் இறந்தார் என்பதை உறுதியாக கூற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே அடுத்த ஒரு சில வாரங்களில் நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>