அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் முழுவதும் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடெனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் தலைநகர் வாஷிங்டன், கேபிடாலில் உள்ள நாடாளுமன்றத்தில் நாளை பதவியேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கடந்த 6ம் தேதி அமெரிக்கா முழுவதிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிரம்ப்பின் தோல்வியை தாங்க முடியாத அவரது ஆதரவாளர்கள் இன்னும் அதே அளவு ஆக்ரோஷத்துடன் இருப்பதாகவும், பிடென் பதவியேற்பு விழாவில் அவர்கள் ஆயுதங்களுடன் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதால் அதிபர் பதவியேற்பில் இம்முறை வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தை சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 7,000 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நாடாளுமன்றத்தை சுற்றி 24 மணி நேர முழு கண்காணிப்பில் உள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் கும்பலாக அத்துமீறி நுழையக் கூடாது என்பதால், கட்டிடத்தை சுற்றி 7 அடி உயர வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தலைநகர் வாஷிங்டன் முழுவதும் 25,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது வழக்கமான பதவியேற்பு விழா பாதுகாப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதற்கிடையே, நேற்று முன்தினம் அமெரிக்கா முழுவதும் பல மாகாணங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் சிறிய அளவிலான போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஒஹியோ, டெக்சாஸ், மிச்சிகன், நியூஹாம்ப்ஷையர் ஆகிய மாகாண தலைநகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒன்று கூடினர். இவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும், இவ்வளவு கட்டுப்பாட்டுக்கு பிறகும் ஒன்று கூடியது பீதியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடாவிட்டாலும் நாளை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படக்கூடாது என்பதில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

தனக்கு தானே மன்னிப்பு இல்லை

அதிபர் டிரம்ப் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தான் செய்த குற்றங்களுக்கு தனக்கு தானே மன்னிப்பு வழங்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதை செய்யப் போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை தனது உறவினர்கள் உள்ளிட்ட பலரையும் பொருளாதார குற்றங்களில் இருந்து மரண தண்டனை வரைக்கும் மன்னிப்பு வழங்கி டிரம்ப் விடுவித்துள்ளார். அதிபராக தனது கடைசி நாளில் அவர் 100 பேருக்கு மன்னிப்பு வழங்க நீண்ட பட்டியலை தயாரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் டிரம்ப் பெயர் இடம் பெறவில்லை. பிடென் பதவியேற்கும் அன்றைய தினம் காலையில் வெள்ளை மாளிகையை டிரம்ப் காலி செய்கிறார்.  அவர் தனது சொந்த மாகாணமான புளோரிடாவில் குடியேறப் போகிறார்.

வீரர்கள் மத்தியில் கருப்பு ஆடு?

நாடாளுமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்குள்ளே சிலர் டிரம்ப் ஆதரவாளர்களாக இருப்பதாகவும், பதவியேற்பு தினத்தில் அவர்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் எப்பிஐ எச்சரித்துள்ளது. இது இன்னும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாதுகாப்பு படை வீரர்களையும் அதன் தலைமை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Related Stories:

>