திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி

திருப்போரூர்: மத்திய அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டு, மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆண்டு தோறும், பல்வேறு எம்பிக்கள் குழு இந்தியா முழுவதும் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, பிரதமரின் கிராமப்புற சாலைகள், ஜல்ஜீவன் மிஷன், தனிநபர் கழிப்பறை, பசுமை வீடுகள் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு தமிழகம் வந்துள்ளது. பிரதாப் ராவ் ஜாதவ் தலைமையில் 18 எம்பிக்கள் அடங்கிய குழுவினர், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி, நேற்று முன்தினம் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த அவர்கள், நேற்று காலை வடநெம்மேலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.அப்போது, தேசிய வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன் விபரம், அதில் வங்கிக்கு திருப்பி செலுத்திய தொகை குறித்தும், கிராமங்களில் போதுமான வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தனர். தொடர்ந்து, திருப்போரூர் ஒன்றியத்தின் மேலையூர் ஊராட்சியில், மத்திய அரசு நிதியின் கீழ் செய்யப்பட்டுள்ள குளம் மேம்பாடு பணியை அவர்கள் பார்வையிட்டு பாராட்டினர். பின்னர், குளத்தில் வளர்ப்பதற்காக மீன் குஞ்சுகளையும் அதில் விட்டனர்.

இதையடுத்து, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், வீடு தோறும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த குழுவினர், வீட்டின் உரிமையாளர்களிடம் குடிநீர் தினமும் வருகிறதா என்று கேட்டறிந்தனர். இந்நிலையில், ஒரு வீட்டின் கழிப்பறையை காட்ட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர். இதையடுத்து அருகே இருந்த ஒரு வீட்டின் கழிப்பறைக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அதை பார்த்த அவர்கள், பழைய கழிப்பறையை காட்டி எங்களை ஏமாற்றுகிறீர்களா, பிரதமர் தனிநபர் கழிப்பறை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறை எங்கே என கேட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதில் அளிக்க முடியாமல், அதிகாரிகள் திணறினர். பின்னர், இந்த வீட்டில் உறிஞ்சு குழாய் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டும் திட்டத்தில் இந்த வீடு இணைக்கவில்லை என கூறி சமாளித்தனர்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின், ஏதாவது ஒரு வீட்டின் கழிப்பறையை ஆய்வு செய்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள், புதிய கழிப்பறை கட்டப்பட்ட ஒரு வீட்டை தேர்வு செய்து, அங்கு அவர்களை அழைத்து சென்று காட்டினர். தொடர்ந்து, குழுவினர் அங்கன்வாடி மையம், பள்ளிக் கட்டிடம், கிராம சாலைகளை பார்வையிட்டு சென்றனர். இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், கார்த்திகேயன், திருக்கழுக்குன்றம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைவேலு ஆகியோர் இருந்தனர்.   

Related Stories:

>