×

பக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக, 2.38 கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதி, திருமண மண்டபம் கடந்த 5 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயில், முருகன் திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அறுபடை வீடுகளுக்கும் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வணங்கினால் அறுபடை வீடுகளுக்கும் சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  இதனால், வார இறுதி நாட்களிலும் அரசு விடுமுறை நாட்களிலும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதையொட்டி முடிகாணிக்கை, பிரசாதக் கடை, வாகன நிறுத்தம், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்துதல், மொட்டை அடித்தல் உள்பட பல்வேறு கட்டணங்கள் மூலம் இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் ₹4 கோடி  வருவாய் கிடைக்கிறது. ஆனாலும், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும், பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இரவு தங்குகின்றனர்.

மேலும், கோயிலில் திருமணம் செய்யவும், சுபமுகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கானோர் வருவது உண்டு.  அவர்கள் தங்குவதற்கும், திருமணம் நடத்துவதற்கும் கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதி, திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இந்து அறநிலையத்துறை சார்பில், கடந்த 2013ம் ஆண்டு, நெம்மேலி சாலையில் ₹95 லட்சத்தில் திருமண மண்டபம், ₹53 லட்சத்தில் பக்தர்கள் ஓய்வு விடுதி, ₹60 லட்சத்தில் பக்தர்கள் ஓய்வுக்கூட வளாகம் ஆகியவை கட்ட திட்டமிட்டு, 100 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன.  ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஓய்வுக்கூடம், தங்கும் விடுதி, திருமண மண்டபம் ஆகிய கட்டிடங்கள் திறக்கவில்லை. இதற்கு, அறநிலையத் துறை சார்பில் பல காரணங்கள் கூறப்படுகிறது.  இதனால், கடந்த 5 ஆண்டுகளாக 2.38 கோடி மதிப்பிலான பக்தர்களுக்கான கட்டிடங்கள் மூடியே கிடக்கின்றன.

அதிகாரிகளின் அலட்சியமான பணியால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நரங்களில் 16 கால் மண்டபத்திலும், சன்னதி தெருவில் உள்ள நிழற்கூரையிலும் குடும்பத்துடன் படுத்து உறங்க வேண்டியுள்ளது.  இதனால், மழை நேரங்களில் குழந்தைகள், பெண்கள் இரவு முழுவதும் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இரவு நேரங்களில் செயின் பறிப்பு திருடர்களின் அச்சுறுத்தல்,  இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.  கோயில் வருவாயை முறையாக பயன்படுத்தாத நிர்வாகம், அவர்களுக்கான வசதிகளை செய்து தருவதிலும் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள், மேற்கண்ட 3 கட்டிடங்களை பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தும் வகையில் உடனே திறக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

 தங்கும் விடுதியில் கோயில் அலுவலகம்
முன்னாள் ராஜ்யசபா எம்பி மைத்ரேயன், தனது தொகுதி வளர்ச்சி நிதி மூலம் கோயிலை ஒட்டி சன்னதி தெருவில் தங்கும் விடுதி கட்டிடம் கட்டி கொடுத்தார். இதன் திறப்பு விழாவும் பிரமாண்டமாக நடந்தது. ஆனால், இதுவரை பக்தர்களின் பயன்பாட்டுக்கு விடவில்லை. இதற்கிடையில், திருக்கோயில் அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடம் மிகவும் பாழடைந்ததால்.   கடந்த 5 ஆண்டுகளாக பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிடத்தின் 8 அறைகளையும் கோயில் அலுவலகமாக பயன்படுத்துகின்றனர். கோயில் அலுவலகத்தின் தளவாட சாமான்கள், பழைய ஆவணங்கள், நாற்காலிகள் ஆகியவை முதல் தளத்தில் உள்ள 4 அறைகளிலும் வைக்கப்பட்டுள்ளன.  தரை தளத்தில் உள்ள 4 அறைகளில் செயல் அலுவலர், மேலாளர், கட்டண வசூலிப்பு, திருமணப்பதிவு, ஊழியர்கள் அறைகள் செயல்படுகின்றன. கோடிக்கணக்கில் வருவாய் உள்ள கோயிலுக்கு, உரிய அலுவலகம் இல்லை என்பது வேதனை அளிக்கிறது என கோயில் ஊழியர்கள் கூறுகின்றனர்.

Tags : devotees , 2.38 crore for the convenience of the devotees, the wedding hall, which has been closed for 5 years, the hostel: Thiruporur Kandaswamy temple officials negligence
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி