×

நிலம் கையகப்படுத்தும் விவகாரம் விவசாய இடங்களில் நுழைய தமிழக அரசுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் விவசாய இடங்களில் நுழையவோ அல்லது பயிர்களை அப்புறப்படுத்தவோ கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இதில் திருத்தம் மேற்கொண்டு, 2015ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்தது. இந்த சட்டப்பிரிவின் கீழ் எண்ணூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை 133 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கும்  திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால், உயர் நீதிமன்றம், தமிழக அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்தது.

இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் ரத்து செய்த உத்தரவுக்கு எந்த இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த தமிழக அரசு 2019ம் ஆண்டு நில ஆர்ஜித சட்டம் என குறிப்பிட்டு மீண்டும் நிலம் கையகப்படுத்துதலை மேற்கொள்ள முன்வந்தது. இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நில உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் குமணன் வாதத்தில், ”முடிந்துபோன ஒன்றுக்கு மறுமதிப்பீடு செய்ய முடியாது. இருப்பினும் சட்டத்தில் ஒருசில சரத்து திருத்தங்களை மேற்கொண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த மாநில அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அது சாத்தியமில்லாத ஒன்றாகும். மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் தற்போது நெல் உட்பட பல வகையான பயிர்களை விளைவித்துள்ளனர்.

அதனால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர். பின்,நீதிபதிகள் பிறப்பித்த  உத்தரவில், ‘‘நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரத்தில் சொக்கப்பன் உட்பட 55 விவசாயிகளை அவர்களின் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தவோ அல்லது நுழைவதற்கோ தமிழக அரசுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது தொடரும். இந்த வழக்கு பிப். 16ம் தேதி இறுதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : lands ,government ,Tamil Nadu ,Supreme Court , Land acquisition issue prohibits Tamil Nadu government from entering agricultural lands: Supreme Court order
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...