×

சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு முதல்வர் சென்ற விமானத்தில் இருந்து கைக்குழந்தை இறக்கிவிடப்பட்டது: 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டது

சென்னை: முதல்வர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால், அக்குழந்தை விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லி சென்ற தனியார் பயணிகள் விமானம் நேற்று பகல் 11.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் சண்முகம் உட்பட 95 பேர் பயணம் செய்ய இருந்தனர். அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டனர். அதே விமானத்தில் புதுடெல்லியை சேர்ந்த ராகுல் (35), இவரது மனைவி லட்சுமிதேவி (30), இவர்களது 4 மாத கைக்குழந்தை ஆகியோர் டெல்லிக்கு புறப்படத் தயாராக இருந்தனர்.

அப்போது திடீரென குழந்தை ‘வீல் வீல்’ என அழுதது. குழந்தையின் அழுகையை தாய் நிறுத்த முயன்றும், தொடர்ந்து அழுதபடியே இருந்தது. விமானப் பணிப்பெண்களாலும் குழந்தையை அமைதிப்படுத்த முடியவில்லை. இது குறித்து விமான பணிப்பெண்கள் விமானியிடம் தகவல் தெரிவித்தனர். விமானி, கைக்குழந்தையின் தாயை விமானத்தை விட்டு கீழே இறக்கி ஓய்வுவறையில் அமரவைத்து குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லுங்கள். இந்த விமானம் மீண்டும் மாலை 5.30 மணிக்கு டெல்லி செல்லும். அதில் வரச்சொல்லுங்கள்’’ என்று கூறினார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் உங்களை விமானத்தை விட்டு இறக்கிவிடுகிறோம். நீங்கள் மாலை விமானத்தில் பயணம் செய்யலாம் என்றனர். இதையடுத்து அந்த பெண் வேறு வழியில்லாமல் கைக்குழந்தையுடன் கீழே இறங்கினார். மீதமிருந்த 93 பயணிகளுடன் அந்த விமானம், 25 நிமிடம் தாமதமாக பகல் 12.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றது.

* சென்னையில் முதல் முறை
விமானத்தில் ஒரு குழந்தை அழுதது என்பதற்காகவே குழந்தையும் தாயும் விமானத்தை விட்டு இறங்கிவிடப்பட்டது சென்னை விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : infant ,Chief Minister ,Chennai ,airport , Infant unloaded from Chennai Chief Minister's flight at Chennai airport: Departs 25 minutes late
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...