×

முதலமைச்சர் என்ற பதவி எனக்கு தானாக வரவில்லை கட்சிக்காக உழைத்து, ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து பதவிக்கு வந்தேன்: குறுக்கு வழியில் வென்றது கிடையாது; முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: முதலமைச்சர் என்ற பதவி எனக்கு தானாக வந்துவிடவில்லை. கட்சிக்காக உழைத்து, ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். குறுக்கு வழியில் எப்பொழுதும் வென்ற சரித்திரம் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி கூறினார். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது. தையொட்டி நேற்று முன்தினம் இரவு சென்னை, அசோக்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பேசியதாவது: சென்னை மாநகர மக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு பல்வேறு பாலங்கள், சாலைகளை அரசு அமைத்துக் கொடுத்துள்ளது.

ரங்கராஜபுரம், தங்கசாலை சந்திப்பு, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, பேசின் சாலை, வடபழனி பல்லாவரம் மேம்பாலம் வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை எம்ஜி ரோட்டில் சுரங்கப்பாதை, கொரட்டூர் ரயில்வே கீழ்ப்பாலம் என பல்வேறு பாலங்களை கட்டிக்கொடுத்துள்ளோம்.வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதை முடிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி (இன்று) பிரதமரை சந்தித்து இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு அழைப்பு விடுக்க இருக்கிறேன். கொரோனா வைரஸ் பரவும் சோதனையான இந்த காலகட்டத்திலும் இந்தியாவிலேயே 60,714 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இதனால் ஏறத்தாழ 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவராக வேண்டுமென்பதற்காக, அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.

தமிழகத்தில் வீடில்லாமல் இருக்கும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அரசு வீடு கட்டி கொடுக்கும். கிராமங்களில் பசுமை வீடுகள் கொடுக்கிறோம். அதற்காக எங்கள் அரசால் ரூ.804 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய பெரிய நகரம் என்று சொன்னால், சென்னை மாநகரம் என்று தேர்ந்தெடுத்தார்கள். நான் முதலமைச்சராக ஆகமுடியும் என்று எப்போதும் நான் நினைத்ததே கிடையாது. எனக்கு முதலமைச்சர் என்ற பதவி தானாக வந்துவிட்டதா. 1989ல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, 9 முறை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன்.

கட்சி போராட்டங்களுக்காக 7 முறை சிறை சென்றேன். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிறகு தான் முதலமைச்சர் ஆனேன். கட்சியில் பல்வேறு பதவிகளை உழைத்து பெற்றுள்ளேன், யாருடைய தயவிலும் பெறவில்லை. ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து கட்சி பதவிகளை பெற்றுள்ளேன். குறுக்கு வழியில் எப்பொழுதும் வென்ற சரித்திரம் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,Edappadi Palanisamy ,party ,crossroads ,Jayalalithaa , The post of Chief Minister did not come to me automatically. I worked for the party and came to office loyal to Jayalalithaa: I never won at the crossroads; Chief Minister Edappadi Palanisamy's speech
× RELATED சொல்லிட்டாங்க…