ஏபிபி-சிவோட்டர் நடத்திய 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: பினராயி விஜயன், மம்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி 166 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ளது. இதில் தமிழக சட்டப்பேரவையின் ஆட்சி காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் இங்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், ஏபிபி-சிவோட்டர் நிறுவனம் தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது.

அதன் கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தை பொருத்தவரை, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 158 முதல் 166 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 60 முதல் 68 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி அதிபட்சம் 4, அமமுக 2 முதல் 6, இதர கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம். கேரளாவில் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளது. இங்கு இடதுசாரியினர் 81-89, காங்கிரஸ் 49-57, பாஜ மற்றும் இதர கட்சிகள் தலா 0-2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே போல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 158 தொகுதிகளில் வென்ற ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். கடும் போட்டி தந்தாலும் பாஜ 102 சீட்களை தாண்டாது என கூறப்பட்டுள்ளது. இதே போல, அசாமில் பாஜ முதல்வர் சர்பானந்த சோனோவால் மீண்டும் முதல்வராக வாய்ப்புள்ளது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி 73-81 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 36-44 தொகுதிகளிலும், ஏஐடியுஎப் 5-9 மற்றும் பிற கட்சிகள் 0-4 தொகுதிகளில் வெல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

* கருத்துக்கணிப்பில் தமிழகத்தில், பிரதமர் மோடியின் செயல்பாடு, அவரது தலைமையிலான ஆட்சி திருப்தி அளிக்கிறதா? என்ற இரண்டு கேள்விகளுக்கும் தலா 44 சதவீதத்தினர் இல்லையென்று பதில் அளித்துள்ளனர்.

* மேற்கு வங்கத்தை பொருத்தவரை, பிரதமரின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 37, திருப்தி என 24 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>