மின்மயானம் பழுதால் திறந்தவெளியில் எரிக்கப்படும் சடலங்கள்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் மின்மயானம் பழுதால் திறந்தவெளி கொட்டகையில் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் புல்லாலக்கோட்டை ரோட்டிலுள்ள நகராட்சி மயானம் கடந்த 9 ஆண்டுகளாக மின்மயானமாக செயல்படுகிறது. மாதம்தோறும் 100 சடலங்கள் வரை எரியூட்டப்படுகின்றன. தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இந்த மயானத்தில் ஒரு சடலத்தை எரியூட்ட ரசீது மூலம் ரூ.2 ஆயிரம், ரசீது இல்லாமல் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. வசூல் வேட்டை அதிகம் இருந்தாலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

மின்மயான புகைபோக்கி இரு மாதத்திற்கு முன் ஒடிந்து சேதமடைந்ததால் மின்மயானத்தில் சடலங்களை எரிப்பது நிறுத்தப்பட்டது. ரூ.4 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு மயானத்திற்கு வெளியே சடலங்கள் எரிக்கப்படுகின்றன. திறந்தவெளியில் எரிப்பதால் துர்நாற்ற புகையால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மின்மயானத்தில் எரிக்காமல் கொட்டகையில் எரிப்பதால் சடலங்களை எரித்ததற்கான ரசீது வழங்குவதில்லை. இறந்த ஒருவரின் இறப்பு சான்றிதழ் வாங்க நகராட்சிக்கு டாக்டர் சான்றிதழ் வழங்க வேண்டும். டாக்டரிடம் சான்று கேட்டு சென்றால், டாக்டர்கள் மயான ரசீது கேட்கின்றனர்.

மின்மயானம் இயங்காதால் மயான ரசீது வழங்குவதில்லை, அதையும் மீறி ரசீது வழங்க ஏற்கனவே பெற்ற ரூ.4 ஆயிரத்தை தவிர்த்து கூடுதலாக ரூ.2 ஆயிரம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மயான பராமரிப்பை அரசு வழிகாட்டுதல்படி  அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தற்போது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருப்பதால் லாப நோக்கில் செயல்படுகிறது. நகராட்சி நிர்வாகம் தலையிட்டு குறைகளை சரிசெய்வதோடு மயான வளாகத்தில் பூங்கா, கழிவறை, தண்ணீர் வசதி, அஸ்தி கலச பராமரிப்பு மையம் போன்றவைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>