×

மற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: மற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி போட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துகள் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்துவரும் 8 மாதங்களுக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது.

ஆனால், 3,352 மையங்களில் 1,91,181 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 21,291 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி போட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது முதல் நேற்றுடன் இதுவரை மொத்தம் 2,24,301 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை அந்தந்த மாநில சுகாதாரத்துறை முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பதால், அன்றாட சுகாதார பணிகள்  பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி போடும் நாட்களை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கூறுகையில், ‘மாநில சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் மற்ற சுகாதார சேவைகள் பாதிக்கப்படாத வகையில் தடுப்பூசியை போட வேண்டும். வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசிகளை போட வேண்டும். உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், கோவா போன்ற மாநிலங்கள் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டும் தடுப்பூசி போட வேண்டும்.

ஆந்திராவில் வாரத்தில் ஆறு நாட்கள் தடுப்பூசி போடலாம். தமிழகம் உட்பட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டால், மற்ற சுகாதார சேவைகள் பாதிக்காது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், நாகாலாந்து மற்றும் ஒடிசாவில் வாரத்தில் மூன்று நாட்கள் தடுப்பூசி போடப்படும்’ என்று தெரிவித்தார்.


Tags : Government ,States , Vaccination only 4 days a week as it affects other health services: Federal government instruction to the states
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...