×

கொரோனா ஊரடங்கின் தளர்வுக்கு பின்னர் சென்னையில் விமான சேவை பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

மீனம்பாக்கம்: கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு பின்பு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததோடு, விமான சேவைகளும் 254 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதியில் இருந்து மே 24ம் தேதி வரை உள்நாட்டு விமான சேவைகள் முழுவதுமாக தடைப்பட்டிருந்தது. மே 25ம் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் குறைந்த எண்ணிக்கையில் இயங்க தொடங்கின. பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தன. ஊரடங்கில் சில தளர்வுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமான சேவைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை, பலர் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். அதே நேரத்தில் சென்னைக்கு வந்தவர்கள் திரும்புவதுமாக உள்ளது. அந்த வகையில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பாடு விமானங்கள் 118, வருகை விமானங்கள் 119 என மொத்தம் 237 விமானங்கள் இயக்கப்பட்டு 25,600 பேர் பயணித்தனர். இன்று ஒரே நாளில் புறப்பாடு விமானங்கள் 127, வருகை விமானங்கள் 127 என மொத்தம் 254 விமானங்களாக அதிகரித்துள்ளன.

புறப்பாடு விமானங்களில் 12,400 பேரும், வருகை விமானங்களில் 17,680 பேரும் என மொத்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின்பு இன்றுதான் அதிகப்பட்சமாக 254 விமான சேவைகளும், பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடையே கொரோனா வைரஸ் பீதி வெகுவாக குறைந்து விட்டது.
தொடர் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்தவர்கள் நேற்றும் இன்றும் ஒட்டு மொத்தமாக சென்னை திரும்புவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai , Air passenger congestion increases in Chennai after relaxation of corona curfew
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...