×

வரதட்சணை கொடுமை: அமெரிக்கா மாப்பிள்ளை சென்னையில் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டை  துரைசாமி காலனி பெருமாள் தெருவை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (29). இவர் அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ”எனக்கு மேட்ரிமோனி மூலம் எனது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது விழுப்புரம் முத்தையா நகரை சேர்ந்த மோகன்  என்பவரின் மகன் வசந்தன்(33) என்பவர் வரன் பார்க்கப்பட்டது. பின்னர் கடந்த 8.6.2016ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கணவர் வசந்தன் அமெரிக்காவில் இன்ஜினியராக வேலை செய்து வந்ததால் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தும் எனது பெற்றோர் கொடுத்தனர்.

பிறகு நான் கணவருடன் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். அப்போது மீண்டும் அதிகளவில் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் நாங்கள் திருமணம் நடந்த நாள் முதல் இருவரும் ஒற்றுமையாக இல்லை. இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிறகு இருவரும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தோம். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் எங்களுக்கு அமெரிக்கா நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துவிட்டேன். எனது வாழ்க்கை தற்போது கேள்வி குறியாக உள்ளது.

எனவே அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய எனது கணவர் வசந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் வசந்தன் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர். வசந்தன் அமெரிக்காவில் இருந்ததால் அனைத்து விமான நிலையத்திற்கும் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த வசந்தனை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த தகவலின் படி அனைத்து மகளிர் போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : groom ,US ,Chennai , Dowry torture: US groom arrested in Chennai
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...