மயிலாடுதுறை நகரில் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் சங்கிலிகுளம்: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறைநகரில் உள்ள சங்கிலிகுளம் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுறை நகரில் இருந்த 100 குளங்கள் தற்பொழுது 89 குளங்களாக கணக்கில் உள்ளது. இவற்றில் கோயில்குளங்கள், வருவாய்துறையினருக்கு சொந்தமான, நகராட்சிக்குச் சொந்தமான குளங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் குளங்கள் தூர்ந்துபோய் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போய்விட்டன. பொதுமக்கள் கண்பார்வையில் உள்ள குளங்கள் மட்டும் ஓரளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டு ஏதோ குளம் என்ற கணக்காக உள்ளது. மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு எதிர்புறம் உள்ள குளம் மட்டும் ஆக்கிரமிப்பு அதிகமில்லாமல் காணப்படுகிறது.

நீதிமன்ற வீதிக்கும் அடுத்த வீதியில் உள்ளது சங்கிலி குளம். மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் சாலையை ஒட்டி உள்ளது இந்த குளம். கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் இந்தக்குளம் 1,28,713 சதுர அடிகொண்டது. சர்வே எண்.313 பிளாக்4/8. இந்தக்குளத்தை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.சங்கிலி குளத்தின் கிழக்குப் பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருந்தது. அதற்கும் வந்தது ஆபத்து. கடந்த ஒருசில தினங்களாக இரவு நேரத்தில் சுமார் 6000 சதுர அடி இடத்தை சிமென்ட் சிலாப் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியின் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், கடந்த 10ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சங்கிலிகுளத்தில் இருந்த மரத்தை பகல் நேரத்தில் வெட்டி அப்புறப்படுத்திவிட்டு சுமார் 6 ஆயிரம் சதுர அடி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து குளத்தை மீட்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு சதுர அடி ரூ.5,000 ஆகும். மொத்த மதிப்பு ரூ.3 கோடி ஆகும். உயர்நீதிமன்ற உத்தரவும் தீர்ப்பும் குளங்களை ஆக்கிரமிக்கக்கூடாது என்று தெள்ளத்தெளிவாக இருந்தும் யாரும் கண்டுகொள்வதில்லை. நகராட்சியிடம் சென்று இந்தக்குளத்தை மீட்கச்சொன்னால் எங்களுடைய குளம் இல்லை என்றும், வருவாய்துறையினரிடம் சென்று இந்து குளத்தை மீட்கச்சொன்னால் அவர்களும் இந்தக்குளம் எங்களது இல்லை என்று கைவிரிக்கின்றனர். 1,28,713 சதுர அடிகொண்ட சங்கிலிகுளம் இன்றைக்கு 30 ஆயிரம் சதுர அடியாக சுருங்கியுள்ளது. தமிழக அரசு அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த மாதத்திற்குள் மிச்ச இடமும் காலியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories:

>