×

புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்: வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் சந்திரவதி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவையை 10 நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார். பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று ஒட்டுமொத்தமாக சபைக்கு வராமல் அனைவரும் புறக்கணித்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் சட்டசபை மைய மண்டபத்துக்குள் செல்லாமல், படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாஜக எம்எல்ஏக்கள் சுவாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் சபையில் பங்கேற்று பின்னர் வெளிநடப்பு செய்தனர். மேலும், ஆளும் காங்கிஸ் கட்சி எம்எல்ஏ லட்சுமி நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இந்நிலையில் மீண்டும் சபை கூடியதும் முதல்வர் நாராயணசாமி 2021ம் ஆண்டு புதுச்சேரி மதிப்பு கூடுதல் வரி திருத்த சட்ட முன்வரைவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. மேலும், கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையின் அனுமதி கோரப்படுகிறது. அப்போது புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்வர் நாராயணசாமி கிழித்து எரிந்தார். பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை, அரசின் திட்டங்களை செயல்படுத்த சுயமாக நிதி ஆதாரத்தை உருவாக்க மாநில அந்தஸ்து வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அந்தஸ்து பெறக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மத்திய அரசு படிப்படியாக மாநில அரசின் உரிமை மற்றும் நிதி ஆதாரத்தை பறித்து வருவதாகவும் குற்றம் சாடினார்.


Tags : Puducherry Assembly ,Central Government ,Chief Minister ,Puducherry , Pondicherry Assembly passes resolution against Central Government's new agricultural laws: Pondicherry Chief Minister tears up copy of agricultural law
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...