சின்னமனூர் அருகே மலைச்சாலையில் நிலச்சரிவு மயிரிழையில் தப்பிய அரசு பஸ்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் மலைச்சாலையில் மழையால், தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 10 நிமிடம் பிந்தியதால் நேற்று நடந்த நிலச்சரிவில் அரசு பஸ் தப்பியது. சின்னமனூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஹேவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் 7 மலைக்கிராமங்கள் உள்ளன; 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் காப்பி, ஏலம், தேயிலை உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த சில மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மலைச்சாலையில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி சுற்றுலாத் தலமாக இருப்பதால், விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவர்.

ஆனால், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபடவில்லை. உள்ளூர் பொதுமக்கள் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சீரமைத்து, போக்குவரத்து தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மலைச்சாலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சில மீட்டர் முன்பாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைக்கற்கள், மண், மரம், செடி, கொடி ஆகியவை சரிந்து சாலையில் விழுந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், போலீசார் அவைகளை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்து பஸ் செல்ல ஏற்பாடு செய்தனர். ஹைவேவிஸ் மலைச்சாலையில் தொடர் நிலச்சரிவு ஏற்படுவதால், மலைக்கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

Related Stories:

>