திண்டுக்கல் சிறுமலை பகுதியில் தொடர் மழையால் மறுகால் பாயும் நீர்த்தேக்கம் : விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி: திண்டுக்கல் சிறுமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமக்கல் ஓடை, ஆணைவிழுந்தான் ஓடை நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடிவாரம் கோம்பை பகுதியில் ஆணைவிழுந்தான் ஓடை, வெள்ளியங்கிரி ஓடை, முருகம்பட்டி குளம் ஓடை மற்றும் காந்திகிராமம் ஓடை என 5க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன. இவைகள் அனைத்து சிறுமலை அடிவாரத்திலிருந்து மேற்கு நோக்கி செல்கின்றன. இந்நிலையில், கடந்த 2008 திமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வெள்ளோடு, கலிக்கம்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி, ரூ.6 கோடியில் சிறுமலை அடிவாரம் வெள்ளோடு பகுதியில் ராமக்கால் ஓடை, ஆணைவிழுந்தான் ஓடை ஆகியவற்றை இணைத்து நீர் தேக்கத்தை உருவாக்கினார்.

தொடர்மழையால் ராமக்கல் மற்றும் ஆணைவிழுந்தான் ஓடை குளத்தில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், 1500 ஏக்கர் பாசன வசதி பெறும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மறுகால் பாயும் நீர்த்தேக்கத்தில் சுற்றுப்புற கிராம மக்கள் குவிகின்றனர். இது குறித்து திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கூறுகையில், ‘திமுக ஆட்சியில் கடந்த 2008ல் இந்த நீர்தேக்கத்தை அமைத்தோம். 2010ல் மறுகால் பாய்ந்தது. அதன்பின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்த்தேக்கத்தை பராமரிக்கவில்லை. தூர்வார விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தொடர் மழையால் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது. அருகில் உள்ள பிள்ளையார்நத்தம் என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி  குளங்களுக்கும் தண்ணீர் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

Related Stories:

>