×

அரிமளம் வனப்பகுதியில் கால்நடைகளை கடத்தும் வாலிபர்கள்: கிராமத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

திருமயம்: அரிமளம் வனப்பகுதியில் வளர்ப்பு மாடு கடத்தும் வாலிபர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுபோல் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வனப்பகுதி சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வனப்பகுதியை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக நாட்டு மாடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மாடுகளை வளர்த்து வருவதோடு அரிமளம் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் நிலவும் தொடர் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்போது நாட்டு மாடு வளர்ப்பை கைவிட்டுவிட்டனர். அதேசமயம் தற்போது மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு நாட்டு மாடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டு மாடுகள் கிடைக்காமல் மஞ்சுவிரட்டு மாடு வளர்ப்பவர்கள் தவித்து வருவதால் இதனை பயன்படுத்தி சில இளைஞர்கள் அரிமளம் பகுதியிலுள்ள உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வலை வைத்து பிடிக்கும் நிகழ்வுகள் நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அரிமளம் அருகே உள்ள ஆனைவாரி கிராமம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாட்டு மாடு ஒன்று கிடப்பதாக அப்பகுதியில் இளைஞர்களுக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் கட்டி கிடக்கும் மாட்டை கடத்த முயற்சி செய்தனர். இதனை அறிந்த அப்பகுதி கிராம இளைஞர்கள் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக தகவலை அளித்ததால் அரிமளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரிமளம் போலீசார் வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் புதுக்கோட்டை அருகே உள்ள கொப்பனகோட்டையை சேர்ந்த மணி, கல்லுபள்ளம் கிராமத்தை சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபர்களை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Adolescents , Teenagers smuggling cattle in Arimalam forest: Villagers caught and handed over to police
× RELATED எஸ்ஐ மீது தாக்குதல்: வாலிபருக்கு வலை