தாண்டவ் வெப் சீரிஸ்க்கு வலுக்கும் எதிர்ப்பு!: தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த குழுவினர் மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு..!!

லக்னோ: அமேசான் பிரைமில் ஒளிபரப்பப்படும் தாண்டவ் என்ற இணைய தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த குழுவினர் மீதும் உத்திரபிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், முகமத் சேஷன் நாயக், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர், டிக்மான்ஷு துலியா, கிருத்திகா கம்ரா உட்பட பலர் நடித்திருக்கும்  தாண்டவ் என்ற இணைய தொடர், கடந்த 15ம் தேதி வெளியானது. அலி அப்பாஸ் இயக்கியுள்ள இந்த தொடர், இந்துமத நம்பிக்கையை புண்படுத்துவதாகவும், பிரதமர் மோடியை மோசமாக சித்தரித்து காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மராட்டிய மாநில பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார். அவரது புகாருக்கு பதில் அளிக்குமாறு, அமேசான் பிரைம் நிறுவனத்திடம் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் மீது உத்திரபிரதேச மாநிலம் ஹரத்கண்ட்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத மோதல்களை உருவாக்க முயன்றதாகவும், புனித தளங்களை களங்கப்படுத்த முயன்றதாகவும், தாண்டவ் தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் வசனகர்த்தா மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேபோல பாஜக நிர்வாகி கபில் மிஸ்ராவும், அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தாண்டவ் இணையத்தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: