தோஹாவில் இருந்து ஆஸ்திரேலியா வந்த விமானத்தில் கொரோனா பயணி: அதிர்ச்சியில் டென்னிஸ் வீரர்கள்

மெல்போர்ன்: ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் 25 பேர், நேற்று காலை தோஹாவில் இருந்து மெல்போர்ன் வந்தனர். அவர்கள் வந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டென்னிஸ் வீரர்களும், போட்டி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் பிப்.8ம் தேதி முதல் பிப்.21ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை அச்சுறுத்தல் உள்ளதால், இப்போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வீரர்கள், வீராங்கனைகள் முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்து, 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதன் பின்னர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஆஸி. அரசு விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை வீரர்கள், வீராங்கனைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று, ஆஸி.ஓபன் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர்கள் 25 பேர் தோஹாவில் இருந்து மெல்போர்னுக்கு நேற்று விமானத்தில் வந்தனர்.

அவர்கள் வந்த விமானத்தில் பயணி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸி. ஓபன் நிர்வாகிகள், தங்களது அங்கீகரிக்கப்பட்ட ட்வீட்டர் முகவரியில் பதிவிட்டுள்ளனர். அதில், ‘டென்னிஸ் வீரர்கள் 25 பேர் வந்த விமானத்தில், பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் 25 பேரும் மெல்போர்னில் உள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். 14 நாட்களும் அவர்கள் பயிற்சிகளில் ஈடுபடவும் அனுமதியில்லை.

அவர்களுக்கு பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். அதில் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு போட்டி அமைப்பாளர்கள் ட்வீட் செய்துள்ளனர். விமானத்தில் வந்த 25 வீரர்களின் பெயர், விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. 14 நாட்கள் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என்பதால், அவர்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். முறையான பயிற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: