×

அயோத்தி அருகே 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது மசூதி.. மரம் நடுதலுடன் ஜன.26ல் துவக்க விழா!

லக்னோ : இடிபட்ட பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதியின் கட்டுமான பணிகள் குடியரசு நாளான ஜனவரி 26ம் தேதி தொடங்குகின்றன.தன்னிப்பூர் என்ற கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் இந்த மசூதி கட்டப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று காலை 8.30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி, மரக்கன்றுகளை நட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று இந்தோ - இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் நிர்வாகிகளால் நடத்தப்பட்டது. அப்போது மசூதி கட்டுவதற்கு வருமானவரித்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுதல், வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெறுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் மசூதி அமையவுள்ள வளாகத்தில் மருத்துவமனை, அருங்காட்சியகம், சமூக சமையல் அறை, இஸ்லாமிய ஆராய்ச்சி மையம், அச்சுக்கூடம் ஆகியவற்றிற்கு அனுமதி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்டப்பட உள்ள மசூதியில் பாபர் மசூதி போன்று குவிமாடம் இருக்காது என்றாலும் அளவில் மிகப்பெரியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபரின் பெயருக்கு பதிலாக வேறு ஒருவரின் பெயர் சூட்டப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் 2019ம் ஆண்டு சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில் இந்த மசூதி கட்டும் பணி தொடங்க உள்ளது.


Tags : mosque ,land ,Ayodhya ,Opening ceremony , Ayodhya, Mosque
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!