முழு திறனுடன் கூடிய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் அரையளவே திறன் பெற்றிருக்கும் இந்திய அணி மேலானது: மாஜி வீரர்கள் பாராட்டு

பிரிஸ்பேன்: வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவர்களின் சொந்த மண்ணில் டெஸ்ட்டில் இந்திய அணியினர் தண்ணீ காட்டி வருகின்றனர். ஷமி, இசாந்த்சர்மா, பும்ரா, உமேஷ் என முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் விலகிய  நிலையில் அனுபவமற்ற  வீரர்கள் ஆஸி. பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகின்றனர். பிரிஸ்பேனில் நடந்து வரும் 4வது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்சில் ஒருகட்டத்தில் 186 ரன்னுக்கு 6 வி்க்கெட் இழந்து தடுமாறிய நிலையில் சுந்தர்-தாகூர் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணியின்  செயல்பாட்டை மாஜி வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூ டியூப் சேனலில், இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் காயத்தில் சிக்கியிருக்கின்றனர், ஆனால் அதில் தான் அழகு அடங்கியிருக்கிறது, இந்திய அணி சிறுவர்களுடன் ஆடி வருகிறது. ஆனால் இவர்கள் இது போன்ற ஒரு சூழலில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். முழுமையான திறனுடன் களமிறங்கியிருக்கும் ஆஸி அணியின் தாக்குதலை பல சரிவுகளுக்கு மத்தியிலும், இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது. முழு திறனுடன் கூடிய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் அரையளவே திறன் பெற்றிருக்கும் இந்திய அணி மேலானது என நான் நம்புகிறேன்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 36 ரன்களுக்குள் சுருண்டு வரலாற்று தோல்வி பெற்ற அவமானத்தில் இருந்து மீண்டு, இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்டில் வெற்றி பெற்ற விதம், சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்டில் அஸ்வினும், விஹாரியும் 50 ஓவர்களுக்கு மேல், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் நின்று அந்த டெஸ்டை ட்ரா செய்தது ஜாம்பவான்களுக்கு உரித்தானது. இந்த டெஸ்டை டிரா செய்தால் இந்த பார்டர் - கவாஸ்கர் தொடர் தான் இந்தியாவின் எப்போதும் சிறந்த டெஸ்ட் தொடராக அமையும்.  

நீங்கள் (இந்தியா) கடைசி டெஸ்டில் ஆடுகிறீர்கள், உங்களிடம் வீரர்கள் இல்லை, இருந்தாலும் போராடுகிறீர்கள். இந்த குணத்தை பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன், இதனை பி-டீம் என்று அழைக்க மாட்டேன். தொடரை சமன்  செய்தாலே போதும் நிச்சயம் இது தான் இந்திய அணியின் வரலாற்றில் சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும், என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள்கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்த தொடரில் இந்திய அணியினர் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. அவர்களின் போராட்ட குணம் இந்த தொடரில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் , இந்திய அணியின் மாற்று வீரர்கள் கூட திறமையானவர்கள் என பாராட்டி உள்ளார். மேலும் இந்திய அணியை ரவிசாஸ்திரி நிர்வகிக்கும் விதம் சிறப்பானது என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக்நைட், சுந்தரின் டெக்னிக்கை விட போட்டி சூழ்நிலையை அறிந்து அவர் ஆடியது தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சுந்தர் 20 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தால் நாம் அவரை கேள்வியே கேட்டு இருக்க மாட்டோம். ஏனெனில், அவருக்கு இது அறிமுகப் போட்டி. மேலும், முதல் தர போட்டிகளில் அவர் அதிகம் ஆடவில்லை, என தெரிவித்துள்ளார்.

கேப்டன் விராட் கோஹ்லி, சுந்தர், தாகூர் சிறப்பாக விளையாடியதாகவும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில் பொறுமையாக விளையாடினார் என தெரிவித்துள்ளார். மும்பையை சேர்ந்த தாக்கூருக்கு மராத்தியில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இவர்களை தவிர சேவாக், ஆஸி.யின் டாம் மூடி, வெஸ்ட் இண்டீசின் இயான் பிஷப் உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.

Related Stories:

>