×

இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை!: பல கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை உமிழ்ந்து தள்ளுகிறது..!!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு எரிமலை வெடிக்க தொடங்குவதன் அறிகுறியாக சாம்பல் புகையை வெளியிட்டு வருகிறது. இந்தோனேசியாவில், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன. அங்கு எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 130 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. தற்போது 5.6 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை எரிமலை வெளியிட்டு வருகிறது. இந்த சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் மாசு அதிகரித்துள்ளது.

எரிமலை வெடிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. அண்மை காலமாக அங்குள்ள மெரபி, சினபங்க் ஆகிய இரண்டு எரிமலைகளும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 56 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 826 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Indonesia , Indonesia, Chemro volcano, eruption
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!