டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; அனுமதிக்கக்கூடாது என்று டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும்..உச்சநீதிமன்றம்

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 54வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குடியரசு தினத்தன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; யாரை அனுமதிக்கக்கூடாது என்பதை டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். தலைநகரில் சட்டஒழுங்கை காக்கும் பொறுப்பு டெல்லி போலீசாரின் கையில் உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

3 புதிய வேளாண் சட்ட திருத்தங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் என்பது இன்று 54வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி தொடங்கிய டெல்லி சலோ போராட்டம் தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள எல்லை பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடும் குளிரை பொருட்படுத்தாமல் விவசாயிகள் 24 மணி நேரமும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுஒருபுரம் இருக்க வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழா நடைபெறும் போது தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மிகப்பெரிய பிரம்மாண்டமான டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தியுள்ளனர்.

அன்றைய தினம் 80,000திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியாக செல்லப்பட்டது. இதேபோல் வருகின்ற 26ம் தேதியும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1 லட்சம் டிராக்டர்கள் செல்ல வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதனை தடை செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் டெல்லி போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் குடியரசு தின பேரணி நடைபெறவுள்ளது.

அச்சமயம் டிராக்டர் பேரணி நடத்துவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால் டிராக்டர் பேரணியை தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து தலைநகரில் சட்டம் - ஒழுங்கை காக்கும் பொறுப்பு டெல்லி போலீஸ் கையில் உள்ளது. தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; யாரை அனுமதிக்கக்கூடாது என்பதை டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் தாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தனர்.

Related Stories:

>