புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் தொடங்கியது!: புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..!!

புதுச்சேரி!: பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரானது கூடியுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரன்பேடி இடையே அதிகார போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அம்மாநில சட்டப்பேரவை கூடியுள்ளது. கூட்டம் தொடங்கியவுடன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்த பாஜக நியமன உறுப்பினர் சங்கருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2வது தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

சட்டமன்ற சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பாஜக நியமன உறுப்பினர்கள் 2 பேர் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என முழக்கமிட்டனர். இவர்களுக்கு மற்றொரு புறம் காங்கிரஸ் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். காங்கிரஸ் அரசிற்கு மெஜாரிட்டி கிடையாது என தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

சபாநாயகர் சிவக்கொழுந்து திருக்குறளை வாசித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவுறுத்தினார். சட்டப்பேரவையின் முக்கிய அம்சமாக வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகளான  அதிமுக, பாஜக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>