ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து மது விற்பதா? கமல் கண்டனம்

சென்னை; ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து மது விற்பது ஏற்புடையது அல்ல என்று நடிகர் கமல் தெரிவித்தார். பத்திரிகையாளர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘காலத்தை வென்றவன்’ என்ற எம்ஜிஆரைப் பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் நேற்று நடந்தது. இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வந்தார். முன்னதாக அவர் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியபின் எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார். விழாவில் காலத்தை வென்றவன் ஆவணப்படத்தை கமல்ஹாசன் வெளியிட்டார்.

விழாவில் அவர் பேசியதாவது: ராமாபுரம் தோட்ட இல்ல சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது, 5 ஆண்டுகள் யாருமே கண்டு கொள்ளவில்லை. அது எனக்கு வேதனை அளித்தது. யார் யாரோ மாண்புமிகு என்று போட்டுக் கொள்கிறார்கள். அதை நீங்களாகவே போட்டுக்கொள்ளக் கூடாது. அது மக்கள் கொடுத்த பட்டம். மாண்புமிகு பட்டம் வாங்க வேண்டும் என்றால் மாண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். மதுபான விற்பனை என்பது ஒருதொழில். அது விவசாயம் இருந்தபோதே தொழிலாக இருந்தது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து மதுவிற்பது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி, ஐசரி கணேஷ், இயக்குனர் சித்ரா லட்சுமணன், எம்ஜிஆர் வளர்ப்பு மகன் ராமச்சந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>