வேலூர் அருகே எருது விடும் விழா காளைகள் முட்டியதில் எஸ்ஐ, போலீஸ் உட்பட 21 பேர் படுகாயம்: பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி

வேலூர்: வேலூர் அருகே 2 இடங்களில் நடந்த எருது விடும் விழாவில் விழாவில் காளைகள் முட்டி எஸ்ஐ, போலீஸ்காரர் உட்பட 21 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் சவுக்கு கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு எருது விடும் விழா தொடங்கி, மதியம் 1 மணிக்கு முடிந்தது. இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து 102 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இதில் 8 காளைகள் உடற் தகுதியில்லாமல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. 94 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டன. காளைகள் ஓடும் பாதையை வழிமறித்து நின்ற பார்வையாளர்களை தடுப்பு வேலிக்கு வெளியே நிற்கும்படி போலீசார் எச்சரித்தனர். அப்போது, சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கி வீசியதில் போலீஸ்காரர் சுரேஷ் படுகாயமடைந்தார். மேலும் பார்வையாளர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரின் கூட்டத்தில் ஒரு காளை புகுந்து தூக்கி வீசியதில் 3 போலீஸ்காரர்கள் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு நின்ற பார்வையாளர்கள் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பார்வையாளர்கள் கீழே விழுந்து எழுந்து, நாலாபுறமும் சிதறி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. பிற்பகல் 2 மணி வரை கலெக்டர் அனுமதி அளித்திருந்தும், 1 மணிக்கே போலீசார் நிறுத்திவிட்டனர். இந்நிலையில் மாடு பிடித்துக்கொண்டிருந்தவர்களின் பிடியில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐயை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் பார்வையாளர்கள் 15 பேரும் காயமடைந்தனர்.

* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர் பலி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா, காணும் பொங்கல் நாளான நேற்று முன்தினம் நடந்தது. இதில், காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி நவமணியும் (24) ஒருவர். காளைக்கு உதவியாக வந்த இவர், மாடு முட்டியதில் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

Related Stories:

>