×

மசினகுடி அருகே பரிதாபம் காது பகுதியில் ரத்தத்துடன் சாலையில் நின்ற காட்டு யானை: வெடிபொருள் வீசி கொல்ல முயற்சியா?

கூடலூர்: மசினகுடி அருகே சிங்கார சாலையில் காது பகுதியில் ரத்தத்துடன் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வெடிபொருள் வீசி அந்த யானையை கொல்ல முயற்சி நடந்ததா? என விசாரணை நடக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று  சுற்றி வந்தது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை மசினகுடி அருகே சிங்கார சாலையில் அந்த யானை 3 மணி நேரமாக நின்றது.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துணை மின் நிலைய ஊழியர்கள், தனியார் தங்கும் விடுதி பணியாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த யானை கடந்த டிசம்பர் மாதம் உடலில் காயத்துடன் திரிந்தது. அதற்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் சாலை பகுதிக்கு வந்து விடுகிறது. இதுவரை யானையால் பொதுமக்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை.

இந்த நிலையில்தான் அந்த யானை நேற்று மாலை மீண்டும் சாலைக்கு வந்துள்ளது. வனத்துறையினர் கண்காணித்தபோது அதன் காது பகுதி கிழிந்து ரத்தம் வடிந்தது தெரிந்தது. உடனடியாக முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் மூலம் பப்பாளிப்பழத்தில் மருந்து மாத்திரைகள் வைத்து யானைக்கு வழங்கினர். யானையின் காது பகுதி கிழிந்து தொங்குவதால் அதன் மீது யாரோ வெடிபொருளை வீசி கொல்ல முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Tags : road ,ear area ,Machinagudi , Wild elephant standing on the road with blood in pathetic ear area near Machinagudi: Attempt to kill by throwing explosives?
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...